வசிஷ்ட நதிக்கு மேட்டூர் அணை உபரி நீரை இணைக்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

Spread the love

 

சேலம் அருகேயுள்ள கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து உருவாகி ஆத்தூர், தலைவாசல், காட்டுக்கோட்டை, தேவியாக்குறிச்சி போன்ற பகுதிகளை கடந்து சுமார் 90 கி.மீ பயணித்து ஸ்வேதா நதியுடன் கலந்து வங்ககடலில் சங்கமிக்கும் வசிஷ்ட நதி வரலாற்று சிறப்புமிக்கதாகும். சப்தரிஷிகளில் ஒருவரும் ராமபிரானின் குருவுமான வசிஷ்ட முனிவர் இந்த நதிக்கரையில் தவம் இருந்ததால் அவர் பெயரிலேயே இது, அழைக்கப்படுகிறது. ஆற்றூர், தலைவாசல், அரங்கலூரில் பகுதியில் இந்த ஆற்றில் தடுப்பணைகள் உள்ளன. சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இந்த ஆற்றினை நம்பியுள்ளன. ஏராளமான கிராமங்களுக்கு நீர் ஆதாரமாகவும் இந்த நதி உள்ளது. எனினும், நமது நாட்டில் மாசடைந்த 351 நதிகளில் முதலிடத்தில் வசிஷ்ட நதி உள்ளதாக மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

தொழிற்சாலை கழிவுகள், கழிவுநீர், கட்டுமான இடிபாடுகள், உணவு மற்றும் இறைச்சி கழிவுகள் இங்கு கொட்டப்படுவதால் இந்தநதி குப்பை கிடங்காக மாறிப் போனது. குறிப்பாக மணிவிழுந்தான் முதல் தியாகனூர் வரையிலான 10 கி.மீ தூரத்தில் இந்நதி மிகவும் மாசடைந்துள்ளது. அதோடு, அம்மம் பாளையம், பெத்தநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மணல் கொள்ளை நடந்துவருகிறது.

வசிஷ்ட நதியின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான கல்வராயன் மலையில் கருமந்துரை அருகே கைக்கான் வளைவு என்ற ஓடையில் ஏற்பட்ட தடை காரணமாக நீர்வரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, வசிஷ்ட நதி நீர்வரத்தின்றி வறண்டு காணப்படும் நிலையே உள்ளது. இதனால் இதனை நம்பியுள்ள விவசாயிகளும், கிராம மக்களும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.இதனை தவிர்க்கும் வகையில் மேட்டூர் அணை உபரி நீரை வசிஷ்ட நதியுடன் இணைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.