தமிழக அரசே டாக்ஸி செயலியை உருவாக்க வேண்டும்: கோவையில் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

Spread the love
தமிழக அரசே தனித்துவமான டாக்ஸி முன்பதிவு செயலியை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட கால் டாக்ஸி கூட்டமைப்பினர் இன்று கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை சிவானந்தா காலனி டாடாபாத் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கலந்து கொண்டு, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், OLA, UBER, RAPIDO போன்ற தனியார் டாக்ஸி செயலிகளுக்கு மாற்றாக, தமிழக அரசே ஒருங்கிணைந்த டாக்ஸி முன்பதிவு செயலியை உருவாக்க வேண்டும் என்றும், அது சாத்தியமில்லையெனில் தனியார் செயலிகளின் கட்டணங்கள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், டாக்ஸிகளுக்காக நகரங்களில் போதிய வாகன நிறுத்துமிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும், சட்டவிரோதமாக வாடகை சேவையில் ஈடுபடும் தனியார் கார்கள் மற்றும் பைக் டாக்ஸிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

தனியார் பதிவு கொண்ட வாகனங்கள் வாடகை சேவையில் ஈடுபடுவதால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அத்தகைய வாகனங்களில் பயணம் செய்வது பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பைக் டாக்ஸி சேவையை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்றும், அரசு அதை அனுமதிக்க முடிவு செய்தால், வணிக வாகனங்களுக்கு வழங்கப்படும் மஞ்சள் எண் பலகை (Transport Registration) முறையை பைக் டாக்ஸிகளுக்கும் கட்டாயமாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மேலும், தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட ‘தமிழ் டாக்ஸி’ செயலியை தமிழக அரசு விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு முன் அனைத்து டாக்ஸி தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டமைப்பினருடன் ஆலோசனை நடத்தி செயலியை வடிவமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு டாக்ஸி கட்டணத்தை (டேரிஃப்) மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், அரசாங்கம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அனைத்து வாகன ஆவணங்களையும் அரசிடம் ஒப்படைத்து, மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக கால் டாக்ஸி கூட்டமைப்பினர் எச்சரித்தனர்.