கோவை மாணவர் தற்கொலை: ஆசிரியர்களைக் கைது செய்யும் வரை உடலைப் பெற மாட்டோம்!

Spread the love

கோவை பீளமேட்டில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் அகிலன் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவத்தில், தொடர்புடைய ஆசிரியர்களைக் கைது செய்யும் வரை மகனின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என அவரது பெற்றோர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

மாணவரின் மரணத்துக்குச் சாதியப் பாகுபாடே காரணம் எனப் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாட்டுக்கறி குறித்து கேள்வி எழுப்பிய ஆசிரியர்?

பள்ளியில் வகுப்பறையில் ஆசிரியர் விஜயகுமார், மாணவர்களிடம் யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள் எனக் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மாணவர் அகிலன் கையை உயர்த்தியுள்ளார். இதையடுத்து, சக மாணவர்கள் அவரைச் சாதி ரீதியாக இழிவுபடுத்தித் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அகிலனின் பெற்றோர் பள்ளித் தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதுவே தனது மகனின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்ததாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆசிரியர்களைக் கைது செய்ய வேண்டும்

இதுகுறித்து மாணவரின் பெற்றோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இன்னும் எத்தனை பேர் வந்து புகார் அளிக்க வேண்டும்? யாரைக் காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள்? இந்த விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை எங்கள் மகனின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம்.

ஆசிரியர்களைப் பணியிடைநீக்கம் செய்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், இதுவரை அவர்களைக் கைது செய்யவில்லை. போதிய ஆதாரங்கள் தேவை எனக் கூறுகின்றனர். இந்த வழக்கில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் மகனின் மரணத்துக்குக் காரணமானதாகக் குற்றம்சாட்டப்படும் ஆசிரியர்கள் விஜயகுமார், அருண்குமார் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டால், மகனின் உடலைப் பெற்றுக்கொள்வோம்.

எங்கள் மகனுக்கு நேர்ந்த கொடுமை இனி வேறு எந்த மாணவருக்கும் நேரக்கூடாது என்பதே எங்களது கோரிக்கை. ஆசிரியர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறுகிறார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின்றன. ஆனால், விசாரணைக்காக மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

எத்தனை நாள்கள் ஆனாலும் பரவாயில்லை. எங்கள் மகனின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை காத்திருப்போம்” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

மாணவரின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோரின் வலியுறுத்தலாக உள்ளது.