மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அவிநாசி தொகுதியில் சேவூர் சாலை கிழக்கு ராஜவீதியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி ஆர் ஜே அருண்குமார் கலந்து கொண்ட பொதுமக்கள் மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சியுரை ஆற்றினார்.
“அவிநாவி மக்களின் 50 ஆண்டு கால போராட்டம் அத்திக்கடவு – அவிநாசி திட்டம், நீங்கள் போராடியதால் அம்மா அவர்கள் நிறைவேற்றுவதாக அறிவித்தார்கள். அம்மா மறைந்தாலும் அவரது வாக்குறுதியை நிறைவேற்ற, நானே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தேன். முழுக்க மாநில அரசின் நிதி 1652 கோடி ரூபாய் ஒதுக்கி துரிதமாக பணிகள் நடந்தன,
கொரோனாவினால் பணி தொடர்வது தாமதமானது, பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அப்படியே முடக்கிட்டார்கள். அதிமுக ஆட்சியில் 85% நிறைவேற்றினோம், மீதி 15% மட்டுமே முடிக்க வேண்டும். இந்த விடியா திமுக அரசு திட்டமிட்டு காலதாமதம் செய்தது.
அதிமுக சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தோம். எனவே கடந்த ஆண்டு திட்டம் நிறைவேற்றப்பட்டதாகச் சொன்னார்கள். இன்று காலையில் விவசாயிகள் பேசும்போது, இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை, அதிமுக ஆட்சி அமைந்ததும் கடைக்கோடி வரைக்கு நீர் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மீண்டும் அதிமுக ஆட்சி வந்தவுடன் இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். என்றைக்கும் நீர் இருக்கவேண்டும் என்பதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து பவானி வரை 6 தடுப்பணைகள் அறிவித்தோம். அவற்றில் 2 அணைகள் கட்டப்பட்டன. கிட்டத்தட்ட 25-30% பணிகள் முடிந்தது. மற்ற 4 தடுப்பணை பணிக்கும் அடிக்கல் நாட்டினோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் தடுப்பணை உயரத்தைக் குறைத்துவிட்டனர். 6 தடுப்பணைகள் கட்டப்பட்டால் ஒன்றேகால் டிஎம்சி தண்ணீர் தேக்கிவைக்கலாம். இதன் மூலம் ஏரி, குளத்தை நிரப்பலாம், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திட்டத்தில் குளறுபடி செய்துள்ளனர். மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும் தடுப்பணை உயரம் அதிகரிக்கப்படும்.
ஏழை மக்களுக்கு கல்வி கொடுக்க குறைந்த கட்டணத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்துக்கொடுத்தோம். திமுகவின் 52 மாத ஆட்சியில் அவிநாசிக்கு ஏதாவது பெரிய திட்டம் கொடுத்தார்களா? அதிமுக ஆட்சியில் பல திட்டங்களை நிறைவேற்றினோம்.
விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்குப் போய்விட்டது. உணவுப் பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது, விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம்.
கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் அரிசி, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். திமுக அரசினால் முழுமையான உணவுப் பொருட்கள் கூட கொடுக்க முடியவில்லை, நிறைய புகார்கள் வருகிறது.
கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என 7 லட்சம் பேருக்கு அம்மா உணவகம் மூலம் மூன்று வேளை உணவு கொடுத்தோம். கொரோனா காலத்தில் விலை மதிக்கமுடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். அமெரிக்காவால் கூட அந்நாட்டு மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற முடியலை, ஆனால் அதிமுக அரசு காப்பாற்றியது. அச்சமயம் பாரத பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும் காணொளி காட்சி மூலம் பேசியபோது, ’தமிழ்நாடு அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது, மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டைப் பின்பற்றுங்கள்’ என்று கூறினார். அந்தளவுக்கு சிறப்பான திறமையான நிர்வாகத்தை நடத்தினோம்.
அதிமுக ஆட்சி தேசிய அளவில் சிறந்த அரசு என்பதை நிரூபித்தோம். எல்லா துறைகளுமே சிறப்பாக செயல்பட்டது, அதன்மூலம் நூற்றுக்கணக்கான தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறோம். உள்ளாட்சித்துறையில் மட்டும் 140 தேசிய விருதுகளைப் பெற்றோம். போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, சமூகநலத்துறை, உயர்கல்வி இப்படி பல துறைகளிலும் விருதுகளைப் பெற்றோம். அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே தொடர்ந்து 5 முறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய விருது பெற்றது அதிமுக ஆட்சியின்போதுதான்.
மேலும், தமிழகத்தில் அதிக உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கி, தேசிய அளவில் ஐந்தாண்டுகள் கிருஷ்கர்மா என்ற உயர்ந்த விருதினைப் பெற்றது அதிமுக அரசு. ஒரு அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் அதிமுக அரசு.
திமுக அரசுக்கு விருது கொடுக்கவேண்டும் என்றால் போதைப்பொருளை கட்டுப்படுத்தவில்லை என்று விருது கொடுக்கலாம். அதிமுக சார்பில் பல முறை போதைப் பொருளை கட்டுப்படுத்த வலியுறுத்தினோம். அப்போது கேட்கவே இல்லை, இப்போது இளைஞர்களுக்கு அறிவுரை கூறுகிறார். உண்மையிலேயே அக்கறை இருந்தால் எதிர்க்கட்சி சொன்னபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் மக்களை காப்பாற்றியிருக்கலாம்.
ஒரு டிஜிபி இருந்தார், 2.0, 3.0, 4.0 என்று கஞ்சாவுக்கு ஓ போட்டுக்கொண்டே ஓய்வுபெற்றுவிட்டார். கஞ்சா விற்பனை செய்வதே திமுகவை சேர்ந்த நிர்வாகிகள்தான். திமுக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசும்போது, இரவில் கண்மூடி காலையில் கண்விழிக்கும்போது, கட்சியினரால் ஏதாவது பிரச்னை வந்துவிடுமோ என்று அச்சத்தில் விழிக்கிறேன் என்றார். திமுக இருக்கும்வரை மக்களுக்குப் பாதுகாப்பில்லை.
திமுக ஊழலின் ஊற்றுக்கண். 10 ரூபாய் என்றாலே பாலாஜி பெயர்தான் மக்களுக்கு ஞாபகத்துக்கு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை, இதில் 2500 பார்களை திமுகவினரே எடுத்துக்கொண்டனர். டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். எல்லாமே மேலிடம் செல்வதாக தகவல். அமலாக்கத்துறையே இதில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக செய்தி வெளியிட்டது. பின் முழுமையாக விசாரித்தால் 40 ஆயிரம் கோடி ஊழல் என்று செய்தி வந்தது. ஸ்டாலின் அவர்களே அதிமுக ஆட்சி வந்தபின்னர் டாஸ்மாக் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கொங்குப் பகுதியில் உள்ள முதியோர்களை குறிவைத்து கொலை செய்து, கொள்ளை அடிக்கிறார்கள். இரும்புக்கரம் கொண்டு அடக்கி நடவடிக்கை எடுத்தால் முதியோர்களைக் காப்பாற்றியிருக்கலாம். அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்டத்தின் ஆட்சி நடக்கும்.
மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். ஆண்டுக்கு 5% உயர்வு. தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் என்று தனியாக வசூலிக்கிறார்கள். குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். அதுவும் ஆண்டுக்கு 6% உயர்வு.
ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா எண்ணத்தில் உதித்தது அற்புதமான லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. திமுக அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டமும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.
பொருளாதாரச் சூழலால் ஏழைப் பெண்களின் திருமணம் தடைபடக் கூடாது என்பதற்காக திருமண உதவித் திட்டம் 25 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தாலிக்குத் தங்கம் திட்டம் மூலம் ஒரு பவுன் தங்கம் கொடுத்தோம். இன்று 80 ஆயிரம் ரூபாய் ஒரு பவுன். அதிமுகவின் 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேருக்குக் கொடுத்தோம். இதனை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.
கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். ஏழை மக்கள் நோய்வாய்ப்பட்டால் அங்குசென்று சிகிச்சை எடுக்கலாம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து, கிளினிக்கை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். 12,100 கோடி ரூபய் தள்ளுபடி செய்தோம். விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24மணிநேரம் கொடுத்தோம். விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர் வாரப்பட்டு நீர்த்தேக்கப்பட்டன, அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது. மீண்டும் அதிமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம் தொடரும்.
திமுகவினர் மருத்துவமனைக்குச் சென்றவர்கள், உடல் உறுப்புகள் பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடந்தது உண்மை என்று திமுக அரசே சொல்லிவிட்டது, ஆனால் நடவடிக்கை மட்டும் எடுக்கவில்லை. தங்கம், வெள்ளி, பணம் திருடுவார்கள். இப்போது கிட்னி திருட ஆரம்பித்துவிட்டனர்.
வறுமையைப் பயன்படுத்தி விலைபேசி கிட்னி எடுக்கப்படுகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இதெல்லாம் முழுமையாக விசாரிக்கப்பட்டு சட்டப்படி நடவ்டிக்கை எடுக்கப்படும்.
திமுக பலம் வாய்ந்த கட்சியாம், அப்படி என்றால் ஓரணியில் தமிழ்நாடு என்று வீடுவீடாகப் போய் உறுப்பினராகச் சேரச்சொல்லி ஏன் கெஞ்சுகிறீர்கள்..? எல்லா கட்சிகளும் விருப்பப்பட்டவர்களிடம் படிவத்தைக் கொடுத்து, உறுப்பினராக சேர்ப்பார்கள். மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதால் வீடுவீடாகச் சென்று எங்கள் கட்சியில் சேர்ந்துகொள்ளுங்கள் என்று கெஞ்சும் கேவலமான நிலைக்கு திமுக சென்றுவிட்டது. யாராவது கையெழுத்துப் போடவில்லை என்றால் உங்களுக்கு உரிமைத் தொகை நிறுத்திவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள். ஒருகாலத்திலும் அவர்களால் நிறுத்த முடியாது, அதிமுக இருக்கும்வரை எந்தத் தவறும் செய்ய விடமாட்டோம்.
உரிமைத் தொகை அறிவித்தார்கள். ஆனால், கொடுக்கவில்லை. அதிமுக தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்ததால் வேறு வழியின்றி 28 மாதம் கழித்து உரிமைத் தொகை கொடுத்தனர். இப்போது மேலும் 30 லட்சம் பேருக்கு கொடுப்பார்களாம், ஏனெனில் அடுத்தாண்டு தேர்தல் வர இருக்கிறது, அதை மையமாக வைத்து அறிவித்திருக்கிறார்கள். முன்பே விதியைத் தளர்த்தி இருக்கலாமே? இப்போதும் தாய்மார்களின் கஷ்டத்தை பார்த்து கொடுக்கவில்லை, ஓட்டுக்காகவே கொடுக்கிறார்கள். அதிமுக 1500 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னோம். ஆனால் கவர்ச்சிகரமாக பேசி மக்களை நம்பவைத்து ஆட்சிக்கு வந்ததும், மகக்ளை ஏமாற்றிவருகிறது திமுக அரசு.
உங்களுடன் ஸ்டாலின் என்று நான்காண்டு கழித்து மக்களிடம் வந்திருக்கிறார் முதல்வர். வீடு வீடாக அதிகாரிகள் வருகிறார்கள். மக்களிடம் இருக்கும் 46 பிரச்னைகள் பற்றி மனு கொடுத்தால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். இன்னும் 7 மாதத்தில் ஆட்சி முடியப்போகிறது. அதற்குள் நிறைவேற்ற முடியுமா? மக்களின் பிரச்னையை தீர்க்கத்தான் அரசு, ஆனால் மக்களுக்கு பிரச்னை இருக்கிறது என்பதையே ஸ்டாலின் இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார். இதேபோல எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புகார் பெட்டி என்று திட்டம் கொண்டுவந்து மனுவை வாங்கி பிரச்னையை தீர்ப்பேன் என்றார், தீர்த்தாரா? அப்போதே தீர்த்திருந்தால் இப்போது மீண்டும் பிரச்னை எழுந்திருக்குமா? உங்களுடன் ஸ்டாலின் மனு சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஆற்றில் கிடக்கிறது, புதுக்கோட்டையில் வடை கட்டி கொடுக்குறார்கள்.
நீட் தேர்வு ரத்து செய்வதுதான் எங்கள் ஆட்சியின் முதல் கையெழுத்து என்றார் ஸ்டாலின், ரத்து செய்தாரா? நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றார் உதயநிதி, ரகசியம் சொன்னாரா? இப்போது நீதிமன்றத்தைக் காரணம் காட்டி கைவிரித்துவிட்டனர். இதைத்தான் நாங்களும் சொன்னோம். இவர்களுடைய அறிவிப்புகளால் 25 மாணவர்களின் உயிர் போனதுதான் மிச்சம், இதற்கு முழு பொறுப்பையும் திமுக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஒரு கோடி கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் கொடுப்பதாகச் சொன்னார்கள். சேலம் பெத்தநாயக்கம் பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாட்டில் மனுக்களை வைத்தனர். அப்போது ஸ்டாலின் பேசும்போது, அவை பறந்துபோய் திமுகவினர் காலில் மிதிபட்டதுதான் மிச்சம்.
ஏழை, விவசாயத் தொழிலாளி, அருந்ததியர் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். அருந்ததியர் மக்களின் வாரிசுகள் தனிக்குடித்தனம் போகிறார்கள் என்றால், அவர்களுக்கும் வீடு கட்டிக்கொடுக்கப்படும்.
அவிநாசியில் தீயணைப்பு நிலையம், அன்னூர் தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது, கூட்டுக்குடிநீர் திட்டம் அமல்படுத்தினோம், தார்சாலைகள் அமைக்கப்பட்டது, சார்பதிவாளர் அலுவலகம் அமைக்கப்பட்டது, தூர்வாரப்பட்டது, இப்படி பல திட்டம் கொடுத்தோம். அத்திக்கடவு – அவிநாசி இரண்டாவது திட்டமும் நிறைவேற்றப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம், பைபை ஸ்டாலின்” என்று முடித்தார்.
கிட்னி திருடும் திமுக.வினர், வறுமையைப் பயன்படுத்தி விலை பேசுகிறார்கள் அவிநாசி தொகுதியில் எடப்பாடியார் ஆவேசம்



Leave a Reply