கோவில்பாளையம் பகுதியில் உதவி ஆய்வாளர் விக்னேஷ், தலைமை காவலர் வேல்முருகன் உள்ளிட்ட போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடகத்திலிருந்து வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
காரின் பின்புறம் மூட்டை மூட்டையாகப் பொருள்கள் இருந்ததால், போலீஸார் சோதனை செய்ய முயன்றனர். அப்போது காரில் இருந்த 3 பேர் போலீஸாரைத் தள்ளிவிட்டு, காரை வேகமாக இயக்கிச் சென்றனர்.
இதையடுத்து சற்றும் தயங்காத தலைமை காவலர் வேல்முருகன், ஓடும் காரின் மேற்கூரையைப் பிடித்துக்கொண்டார். காரை நிறுத்தாமல் கடத்தல்காரர்கள் தொடர்ந்து வேகமாகச் சென்ற நிலையில், உயிரைப் பொருட்படுத்தாமல் அவர் காரின் மேற்கூரையில் தொங்கியபடி சென்றார்.
விளாங்குறிச்சி, காளப்பட்டி நால்ரோடு, சித்ரா வழியாக கணியூர் நோக்கிச் சென்ற காரை, கணியூர் போலீஸார் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொடர்ந்து துரத்திச் சென்றன. பின்னர் அவிநாசி போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 40 கி.மீ. நீடித்த துரத்தலுக்குப் பிறகு, அவிநாசி அன்னபூர்ணா ஹோட்டல் அருகே போலீஸாரும் ஆம்புலன்ஸ்களும் காரைச் சுற்றி வளைத்தனர்.
காரில் இருந்த இருவர் தப்பியோடிய நிலையில், ஒருவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில் மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், ராஜஸ்தானைச் சேர்ந்த அவர்கள் பெங்களூரிலிருந்து சுமார் 300 கிலோ குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கோவைக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.
ஓடும் காரின் மேற்கூரையில் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் பயணித்து கடத்தல்காரர்களை விரட்டிப் பிடிக்க உதவிய தலைமை காவலர் வேல்முருகனின் துணிச்சலான நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.



Leave a Reply