எனக்குக் கிடைத்த வாக்குகள் அவருக்கும் கிடைக்கும் – கோவை தெற்கில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக கமல்ஹாசன் பிரசாரம்

Spread the love

கோவை தெற்கு தொகுதியில் தனக்கு கிடைத்த வாக்குகள் அனைத்தும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கே கிடைக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தேர்நிலைத் திடல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “அம்மன் குளம், கெம்பட்டி காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களை எனக்கு நன்றாக தெரியும். இந்த தொகுதியில் நான் நடந்து செல்லாத வீதி இல்லை என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த மக்கள் உணர்வுபூர்வமானவர்கள். ஒருபைசா கூட வாங்காமல் எனக்காக 51,481 வாக்குகள் பதிவு செய்தவர்கள் இவர்களே. அந்த அன்பு வாக்குகள் இம்முறை செந்தில் பாலாஜிக்கே விழும்” என்றார்.

மேலும், “இது உங்கள் தொகுதி என்று செந்தில் பாலாஜி கூறிய பெருந்தன்மை பாராட்டத்தக்கது. அதற்கு பதிலாக இது நம்முடைய தொகுதி என்று நான் கூறினேன்” என்றும் தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதிக்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.1.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச தரத்தில் நீச்சல் குளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கமல்ஹாசன் கூறினார்.

தமிழகத்தின் விளையாட்டு வளர்ச்சிக்காக துணை முதல்வர் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டிய அவர், கோவையிலிருந்தும் உலகத் தரத்தில் நீச்சல் வீரர்கள் உருவாகும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படாததை கேள்வி எழுப்பிய கமல்ஹாசன், “தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை எந்த வகையிலும் குறைவான நகரமல்ல. மக்கள் தொகை குறைவு என்ற காரணம் ஏற்க முடியாது” என்றார்.

அதேபோல், கோவை விமான நிலைய விரிவாக்கம் நீண்டகாலமாக நிலுவையில் இருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கே இருப்பதாக தெரிவித்தார்.

செந்தில் பாலாஜியின் அரசியல் திறனை பாராட்டிய கமல்ஹாசன், “மாநகராட்சியின் 100 வார்டுகளில் 96 வார்டுகளை வெற்றி பெற்ற வரலாற்றை மீண்டும் அவர் படைப்பார். தமிழக அரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை கோயம்புத்தூர் உருவாக்கப் போகிறது” என்றார்.

கோவையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா, பெரியார் நூலகம், தங்க நகை பூங்கா போன்ற திட்டங்களை மேற்கோள் காட்டி, திமுக அரசின் வளர்ச்சி திட்டங்களை அவர் பாராட்டினார்.

இறுதியாக, “இது நம்முடைய தொகுதி, நம்முடைய மக்கள். அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து செந்தில் பாலாஜியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டு தனது உரையை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *