அன்பும் ஆதரவும் தான் என் சக்தி; விரைவில் பிரச்சாரத்திற்கு திரும்புவேன் – வானதி நம்பிக்கை

Spread the love

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது தொண்டர்களுக்கும் தொகுதி மக்களுக்கும் உருக்கமான வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.
கடந்த 11ஆம் தேதி திடீர் உடல்நல பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது நலமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அன்பு சகோதர சகோதரிகளே, உங்கள் அன்பும் பிரார்த்தனைகளும் எனக்கு மிகுந்த வலிமை அளிக்கின்றன. நான் விரைவில் குணமடைந்து வருகிறேன். இன்னும் சில நாட்களில் உங்களை நேரில் வந்து சந்திப்பேன்” என்று கூறியுள்ளார்.
தான் இல்லாத நேரத்திலும், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தனது மகன் ஆகியோர் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டு, அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள “எனது பூத் வலிமையான பூத்” என்ற கலந்துரையாடல் நிகழ்வை வெற்றிகரமாக நடத்த வேண்டும் எனத் தொண்டர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சமூக வலை தளத்தில் வெளியிட்ட பதிவில், “உங்கள் நம்பிக்கையே என் மருந்து. விரைவில் குணமடைந்து உங்கள் இடையே வருவேன். மீண்டும் சந்தித்து வெற்றியை கொண்டாடுவோம்” என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் மருத்துவமனையில் இருந்தாலும், அவரது இந்த வீடியோ செய்தி கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ வெளியானதையடுத்து, சமூக வலை தளங்களில் அவரது ஆதரவாளர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.