தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்த்த ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை, வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் அமலுக்கு வருவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை உத்தியோகபூர்வமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில், மாநிலத்தின் நிதிநிலை காரணமாக 2020 ஏப்ரல் 27-ஆம் தேதியிலிருந்து ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றும் (சரண்) திட்டம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை அமுலாக்கும் வகையில், சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை அறிவித்தார்.
அதன்படி, அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 15 நாட்கள் வரையிலான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறலாம். பணியில் சேர்ந்த காலத்தை பொருத்து, யாருக்கு எந்த தேதியில் இருந்து திட்டம் பொருந்தும் என்பதற்கான விவரங்களும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020 முதல் செப்டம்பர் 30, 2025-ஆம் தேதிக்குள் பணியில் சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய தகுதி பெற்றுள்ளனர். இந்த உத்தரவு, மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து சார்ந்த நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply