ஸ்ரீநாராயண குருதேவ சுவாமிகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைப் பரப்பிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகரகாவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் அனைத்துத் தரப்பு மக்களாலும் பெரிதும் போற்றப்பட்டு வணங்கப்படும் ஆன்மீகப் பெரியவர் ஸ்ரீநாராயண குருதேவ சுவாமிகள். இவரைப் பற்றி, கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியைச் சேர்ந்த ‘சுபாஷ்’ என்பவர், சமூக வலைதளங்களில் தரக்குறைவாகவும், அவமதிக்கும் வகையிலும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி வீடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையிலும், பொதுமக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் வேகமாக பரவி வருகிறது.
இது தொடர்பாக, கோயம்புத்தூர் குருதேவன் சமாஜத்தின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து தமிழகத்திலும் சுபாஷ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள் மேலும் சமூக வலைதளங்களில் இந்த அவதூறு வீடியோவை வெளியிட்ட சுபாஷ் என்பவரின் டிஜிட்டல் ஆதாரங்களை உரிய முறையில் சேகரித்து விசாரணை நடத்த வேண்டும்.மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பதிவிடப்பட்டுள்ள இந்தக் கணக்கின் பின்னணி மற்றும் ஐபி (IP) முகவரிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
சட்ட ஒழுங்கு மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் செயல்பட்ட அந்த நபர் மீது குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவைப்பட்டால் சைபர் கிரைம் பிரிவின் தொழில்நுட்ப உதவியைப் பெற்று, இந்த அவதூறு பதிவுகள் நீக்கப்படாமல் ஆதாரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
மனுதாரர் தரப்பில், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் அடங்கிய ‘பென்டிரைவ்’ (Pen Drive) காவல்துறையிடம் ஆதாரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் மத உணர்வுகளையும், சமூக அமைதியையும் பாதுகாக்கும் வகையில் காவல் துறை உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ஆன்மீக அன்பர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Leave a Reply