கோவையில் ‘ரோட்டரி யுனைட் வனம்’ திட்டம் தொடக்கம்: 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு!

Spread the love

கோவையில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் ‘சிறுதுளி’ அமைப்பு மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ‘ரோட்டரி யுனைட் வனம்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளன. ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் இலக்கின் முதற்கட்டமாக இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கோவை ‘சிறுதுளி’ அமைப்பு, 2003-ஆம் ஆண்டு முதல் நீர்வளப் பாதுகாப்பு, நீர்நிலைகள் புனரமைப்பு, கழிவு மேலாண்மை மற்றும் பசுமைப் பரப்பு உருவாக்கம் ஆகிய பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வரும் இவ்வமைப்பு, மாநகராட்சி, ரயில்வே மற்றும் கோயில் நிலங்கள் உட்பட 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைப் பசுமைப் பகுதியாக மாற்றியுள்ளது. மேலும், தமிழக அரசின் ‘பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தில்’ இணைந்து செயல்பட்டு வரும் சிறுதுளி அமைப்பு, இந்து சமய அறநிலையத்துறை நிலங்களில் இதுவரை 80,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பேரூர்–செட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு பால கணபதி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், கோயம்புத்தூரில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களின் ஆதரவோடு ‘ரோட்டரி யுனைட் வனம்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர்,  இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், சமூக நலன் சார்ந்த முயற்சியாக, வாழ்வாதார உதவிகள் தேவைப்படும் குடும்பம் ஒன்றிற்கு அத்தியாவசியப் பொருட்களையும் அவர் வழங்கினார்

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்  ரமேஷ், ரோட்டரி மாவட்ட (3206) ஆளுநர் ஆர். எஸ். மாருதி, சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் வெஸ்ட் தலைவர் சந்திரசேகர், செயலாளர் முத்தழகப்பன், திட்டத் தலைவர்  சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.