தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 50,000 சாவித் தொழிலாளர்களுக்குத் தனி நலவாரியம் அமைக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாவித் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம், கோவையில் மாபெரும் வெற்றியைக் குறிக்கும் வகையில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்துவது, சங்கத்தின் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பது, புதிய தொழில் மேம்பாடு மற்றும் பயிற்சி திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், உறுப்பினர்களின் நலனை மையமாகக் கொண்டு புதிய செயல்திட்டங்களும் வகுக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசுக்குச் சங்கம் சார்பில் சில முக்கியக் கோரிக்கைகளும் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாநிலம் முழுவதும் சிதறிக்கடந்து உழைக்கும் 50,000-க்கும் மேற்பட்ட சாவித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்றும், இதில் ஈடுபட்டுள்ள சுமார் 10,000 பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
கூடுதலாக, ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் சாவி மற்றும் சென்சார் கருவிகள் விற்பனை செய்யப்படுவது குறித்துப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோவை மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் அன்போடு வரவேற்ற இந்த நிகழ்விற்கு, சங்கத்தின் தலைவர் மு.ஆனந்தன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஆர்.எஸ். கௌசல் (D.M.E., B.E.A., LLB Honors) முன்னிலை வகிக்க, விழா ஒருங்கிணைப்பாளரும் மாநிலத் துணைச் செயலாளருமான செல்வபிரேம்குமார் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



Leave a Reply