திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 2018-ஆம் ஆண்டு ‘ருக்மணி’ என்ற யானை உயிரிழந்ததைத் தொடர்ந்து, கடந்த எட்டு ஆண்டுகளாகக் கோவில் யானை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், பக்தர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக, அசாம் மாநிலத்திலிருந்து ‘ஹீராலால்’ என்ற 8 வயது ஆண் யானை வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில் கோவில் வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டது. அசாம் மாநில அரசு தமிழகக் கோவில்களுக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ள 5 யானைகளில் ஒன்றாக இந்த யானை திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்துள்ளது.
கோவிலுக்கு வந்துள்ள ஹீராலால் யானையைச் சிறப்பாகப் பராமரிக்க அறநிலையத்துறை சார்பில் ₹42 லட்சம் CSR நிதி ஒதுக்கீட்டில் அதிநவீன வசதிகள் செய்யப்பட உள்ளன. இதற்காகக் கோவில் வளாகத்திலேயே 1,600 சதுர அடி பரப்பளவில், 5 அடி ஆழம் கொண்ட பிரம்மாண்ட நீச்சல் குளம், குளுமை தருவதற்காக 10 ஷவர் அமைப்புகள் மற்றும் 100 சதுர அடியில் மண் குளியல் எடுப்பதற்கான திறந்தவெளி அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது அசாமில் இருந்து வந்துள்ள பாகன்களின் வழிகாட்டுதலோடு உள்ளூர் பாகன்கள் யானையைப் பராமரித்து வருகின்றனர். சிறப்பு கால்நடை மருத்துவக் குழுவின் தீவிர கண்காணிப்பில் இருக்கும் ஹீராலாலை, அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையடைந்த பிறகு பக்தர்கள் நேரடியாகக் கண்டு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Reply