“ஆபரேஷன் சிந்தூர்” – பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியாவின் அதிரடி தாக்குதல்

operation sindoor
Spread the love

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் மே 22-ஆம் தேதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பயங்கரச் சம்பவத்துக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி கடுமையான பதிலடி வழங்கப்படும் என்று உறுதியாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்புத் துறை அமைச்சர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோருடன் தொடர் ஆலோசனைகளும் நடைபெற்றன.

இந்த நிலையில், இந்தியா கடந்த நள்ளிரவில் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற குறியீட்டு பெயரில், பாகிஸ்தான் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது விமானப்படை வழியாக அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் கடுமையாக சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முகாம்கள்:

  1. மர்கஸ் சுப்ஹான் அல்லா – பஹவல்பூர்

  2. மர்கஸ் தைபா – முரிட்கே (லஷ்கர் இ தொய்பாவின் தலைமையகம்)

  3. சர்ஜல் / தெஹ்ரா கலன்

  4. மெஹ்மூனா ஜோயா வசதி – சியால்கோட்

  5. மர்கஸ் அஹ்லே ஹதீஸ் – பர்னாலா, பிம்பர்

  6. மர்கஸ் அப்பாஸ் – கோட்லி

  7. மஸ்கர் ரஹீல் ஷாஹித் – கோட்லி மாவட்டம்

  8. ஷவாய் நல்லா கேம் – முசாஃபராபாத்

  9. மர்கஸ் சையத்னா பிலால்

இத்தாக்குதல்கள் மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர் இ தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் தலைமையிடங்களை நேரடியாக குறிவைத்து மேற்கொள்ளப்பட்டன என்பது முக்கியமானது.

இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் “நீதி நிறைநிறுத்தப்பட்டது” எனவும், “ஜெய் ஹிந்த்” எனவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

“ஆபரேஷன் சிந்தூர்” தொடர்பாக இன்று மத்திய அரசும், பாதுகாப்புப் படைகளும் விரிவான விளக்கங்களை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அதிரடி நடவடிக்கை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் போர்க்கால தயாரிப்பின் ஒரு முக்கிய கட்டமாகவும், எதிர்கால பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிரான வலிமையான எச்சரிக்கையாகவும் கருதப்படுகிறது.