தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 2024-25ம் ஆண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவர் பட்டமேற்படிப்பு சேர்க்கை ரத்து…

Agri university
Spread the love

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலைப் பட்டமேற்படிப்புப் பயிலகமானது தனது 11 உறுப்புக் கல்லூரிகளின் வாயிலாக 33 துறைகளில் முதுநிலைப் படிப்பு மற்றும் 28 துறைகளில் முனைவர் பட்டப் படிப்பையும் வழங்குகிறது. இந்த பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 08.05.2024 முதல் பெறப்பட்டு அதற்கான நுழைவுத்தேர்வு 23.06.2024 அன்று நடத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வுக்கு 2,881 விண்ணப்பங்களை பல்வேறு மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் இருந்து, இளநிலை படிப்பை முடிப்பதில்  வெவ்வேறு நிலைகளில் உள்ள, மாணவ மாணவியர் விண்ணப்பித்திருந்தனர்.  இதில் பெரும்பாலான மாணவ மாணவியர் தங்களது இளநிலை பட்டப்படிப்பை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் தான் முடிக்க இயலும் என்றும், அதனால் இந்த முதுநிலை படிப்பு மாணவர் சேர்க்கையை தள்ளி வைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்த சூழ்நிலையில் கால தாமதமாக இளநிலை பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுவதில் ஏற்பட்ட  நடைமுறை சிக்கல்களினை தவிர்க்கும் விதமாக நடப்பு ஆண்டில் மே மாதம் துவங்கப்பட்ட  முதுநிலை மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படுகிறது. விண்ணப்பித்த மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கட்டணங்களும் அவரவர் வங்கி கணக்குகளுக்கு திருப்பி செலுத்தப்படும். புதிய மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.