அறிவுலகின் நிழல் மனிதர்கள்!  போலி எழுத்தாளர்களும் இலக்கிய வீழ்ச்சியும்!

Spread the love



எழுத்து என்பது ஒருவரின் தனித்துவமான சிந்தனை. ஆனால் இன்றைய சூழலில் வணிக நோக்கத்திற்காகவும் புகழுக்காகவும் பிறரின் உழைப்பைத் திருடுபவர்கள் அல்லது போலி அடையாளங்களுடன் எழுதுபவர்கள் பெருகிவிட்டனர்.

தற்போதைய காலகட்டத்தில் சொந்தமாகச் சிந்திக்காமல் AI (ஏஐ) எனும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி கதைகளையும், கட்டுரைகளையும் எழுதிவிட்டு அதைத் தன் சொந்த படைப்பு என்று கூறுவார்கள்.

இது போன்ற சூழல் தற்போது கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் நடந்தேறி இருக்கிறது. இதனால்

தமிழ் ஆர்வலர்கள் பலரும் அச்சம் அடைந்துள்ளனர்.

சுயசிந்தனையோடு எழுதப்படும் கதை, கட்டுரைகள் இது போன்ற போலி நூல்களால் மறைக்கப்படும் ஆபத்து உள்ளதாக எச்சரித்துள்ளனர்.

புத்தகங்களின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு மாணவர்கள் எழுப்பிய புகார்கள் என்ன? அந்த பதிப்பகம் குறித்து விமர்சிப்பது ஏன்?

பெருமாள் முருகனின் குற்றச்சாட்டு

பெரியார் அறிவுலகத்தை அமைத்ததற்காக திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு, திராவிடர் கழகம் சார்பில் நவ.ர் 4-ம் தேதி, கோவையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதற்கு இரு நாட்கள் கழித்து, (நவ. 6), ”பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்” நடந்திருப்பதாக, அதே தலைப்பில், எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டினார். முதலில் இதுகுறித்து அவர் ஓர் இணைய இதழில் பதிவு வெளியிட்டபோது, இல்லாத பதிப்பகத்தின் பெயரில் பன்னாட்டு தர புத்தக எண் (ISBN) இல்லாத, பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவால் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் நூலகத்தில் இருப்பதாக அதில் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர் குறிப்பிட்டிருந்ததற்கு மாறாக, அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் ஆகிய பெயர்களில் சென்னை மடிப்பாக்கம் பகுதியில் ஒரே முகவரியில் அந்த பதிப்பகங்கள் இயங்கி வருவதும், அந்த பதிப்பகங்களின் சார்பில் நூலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 1,800 நூல்கள் உள்ளிட்ட 2,393 புத்தகங்களுக்கு பன்னாட்டு தர புத்தக எண் பெறப்பட்டிருப்பது தெரியவந்தது.

பெருமாள் முருகனின் பதிவைப் பாராட்டிய முதலமைச்சர் விஜய், திமுகவின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்து, திமுக ஆட்சியின்போது, இந்த புத்தகங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டதாக பல்வேறு “ஆதாரங்களை” அமைச்சர் ராஜ்மோகன், அதுகுறித்து விசாரிப்பதற்கு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் தரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதை திமுக மறுத்தது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடந்ததைத் திசை திருப்பவே இந்த குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டதாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

பெருமாள் முருகனின் குற்றச்சாட்டு குறித்து, பெரியார் அறிவுலகத்தில் பிபிசி களஆய்வு மேற்கொண்டு, எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர், ஆராய்ச்சி மாணவர்கள், வாசகர்கள் என பல தரப்பினரிடம் பேசியது. அதில் அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் பெரும்பாலும், ஒரே மாதிரியான பொய்யான பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் மற்றும் தலைப்புகளில் வெளியிடப்பட்டது தெரியவந்தது.

அதன்பின்பு பெருமாள் முருகனிடம் இந்த குற்றச்சாட்டு குறித்து, பிபிசி விரிவான நேர்காணல் கண்டது. அப்போது, ”ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடந்தபின்பு இந்த குற்றச்சாட்டைத் தெரிவித்ததில் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. ஒரு எழுத்தாளராக, தரமற்ற புத்தகங்கள் நூலகங்களில் இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த குற்றச்சாட்டைத் தெரிவித்தேன்” என்றார்,

அந்த புத்தகங்கள் எங்குமே இல்லாத வகையில் அவை அழிக்கப்பட வேண்டுமென்று அவர் கோரினார். அதற்கு முன்பாகவே, பெரியார் அறிவுலகத்திலிருந்து அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகப் புத்தகங்கள் அகற்றப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசியிருந்த அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் உரிமையாளர் மோகன், இந்த குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக எதிர்கொள்ளப்போவதாகத் தெரிவித்திருந்தார். பெரியார் அறிவுலகத்துக்கு ரூ.17 லட்சத்துக்கு மட்டுமே, தான் புத்தகங்களை விற்பனை செய்திருப்பதாகவும், கலைஞர் நூலகம் உள்ளிட்ட பிற நூலகங்களுக்கு 5 லட்ச ரூபாய் என்ற அளவில் புத்தகங்களை விநியோகம் செய்திருப்பதாகவும் தெரிவித்தார். புத்தகங்களை மாற்றித்தருவதாகவும் அவர் அப்போது கூறியிருந்தார்.

ஆராய்ச்சி மாணவர்களின் குற்றச்சாட்டுகள்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க (The Booksellers and Publishers Association of South India – BAPASI ) நிர்வாகிகள், அமைச்சர் ராஜ்மோகனை சந்தித்து பதிப்பகங்களின் கோரிக்கையை விளக்கினர். அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்கள் குறித்து, சங்கத்திலுள்ள யாருக்குமே தெரியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதேநாளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தினர் இணைந்து, முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

அதன்பின், இவ்விரு பதிப்பகங்களால் மாநிலம் முழுவதும் நூலகங்களுக்குத் தரப்பட்ட 25 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக, ஊடகங்கள் சிலவற்றில் தகவல் வெளியானது. லஞ்ச ஒழிப்புத்துறை, பெரியார் அறிவுலகத்திலும், புத்தகங்களை விநியோகித்த அகல் விளக்கு பதிப்பக உரிமையாளரிடமும் விசாரணையை நடத்தியுள்ளது.

பெரியார் அறிவுலகத்திலுள்ள ஆங்கில நூல்கள் பிரிவிலும் போலியான புத்தகங்கள் இடம்பெற்றிருப்பதாக ஆராய்ச்சி மாணவர்கள் பிரேம்குமார், சதீஷ்குமார் ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர். இதுபற்றி பிபிசி தமிழிடம் அவர்கள் இருவரும் விளக்கினர்.

மாணவர் பிரேம்குமார், ” பெரியார் அறிவுலகத்தில் தமிழ் நூல்கள் கொள்முதல் முறைகேடு புகார் வந்த பின்பு, நாங்கள் ஆங்கில நூல்கள் பிரிவிலும் ஆய்வு செய்தோம். முக்கியமாக ஐந்தாம் தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவில் விண்டேஜ் பதிப்பகத்தின் (Vintage Press Limited) பெயர்களில் 257 புத்தகங்கள் உள்ளன. அவற்றில் சில புத்தகங்களின் முதல் பதிப்பே 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளாக இருந்தன. 300 பக்கங்கள் மட்டுமே இருந்த அந்த புத்தகங்கள் ஒவ்வொன்றின் விலையும் சுமார் ரூ.9,000 முதல் ரூ.9,900 வரை என்று இருந்தது. ஆனால் அதற்கேற்ற தரமோ, வடிவமைப்போ அந்த புத்தகங்களில் கொஞ்சமும் இல்லை” என்றார்.

”எங்களுக்கு அதிர்ச்சியும் சந்தேகமும் ஏற்பட்டது. அதில் இருந்த பதிப்புரிமை மற்றும் பதிப்பு விபரங்களை (Imprint Page) ஆய்வு செய்தபோது, சந்தேகம் வலுத்தது. அந்த புத்தகங்களில் இருந்த சர்வதேச தர புத்தக எண்ணை (ISBN) இந்திய அளவிலான ISBN இணையதளத்தில் தேடியபோது உரிய தகவல்கள் கிடைக்கவில்லை. பின்னர் உலக அளவிலான WorldCat இணையதளத்திலும் தேடியபோது அந்தப் புத்தகங்கள் குறித்த பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. அதன்பின் சில தொழில்நுட்பங்களைக் கொண்டு அவற்றை ஆய்வு செய்தோம்” என்றார்.

ஆய்வில் ஈடுபட்ட பிரேம்குமார், தமிழில் பதிப்பகங்கள் தொடர்பாக ஆராய்ச்சிப் படிப்பை (பி.ஹெச்.டி.) மேற்கொண்டு வருகிறார். அவருடன் மற்றொரு ஆராய்ச்சி மாணவரான சதீஷ்குமாரும் இந்த ஆங்கில நூல்களின் நம்பகத்தன்மை குறித்த ஆய்வை இணைந்து மேற்கொண்டுள்ளார். இஸ்க்ரா என்ற பெயரில் இணைய பக்கங்களில் இவர் எழுதி வருகிறார்.

அதுபற்றி விளக்கிய ஆராய்ச்சி மாணவர் சதீஷ்குமார், ”நாங்கள் ‘சுற்றுலா: கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் தத்துவம்’ (Tourism: Principles, Practice and Philosophy) என்ற தலைப்பிலான புத்தகத்தை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டோம். அந்தப் புத்தகத்தின் முதல் 15 பக்கங்களை ஸ்கேன் செய்து, ஆய்வுத் திருட்டைக் கண்டறியும் Turnitin மென்பொருள் மூலம் பரிசோதித்தோம். அதில் 64 சதவிகிதம் அளவுக்கு ஆய்வுத் திருட்டு இருப்பதாக முடிவு கிடைத்தது. தொடர்ந்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கண்டறியும் சோதனையை மேற்கொண்டபோது, 70.7 சதவிகிதம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் என்பதும் தெரியவந்தது. யாருடைய ஆய்வில் இருந்து எடுத்தனர் என்பதையும் கண்டறிந்தோம்” என்றார்.

இவர்கள் இருவரும் இணைந்து விண்டேஜ் பதிப்பகத்தின் பெயரில் குறிப்பிடப்பட்டிருந்த இணையதளத்தை ஆய்வு செய்துள்ளனர். அந்த இணையதளம் ஏற்கெனவே ஒரு ஜவுளி நிறுவனத்துடன் தொடர்புடைய இணைய களத்தை (domain) பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பது போன்று இருப்பதையும் அதில் அவர்கள் கண்டறிந்துள்ளனர். அதை பிபிசியிடம் பகிர்ந்தனர்.

ஆங்கில நூல்கள் அகற்றம்

ஆராய்ச்சி மாணவர்கள் சுயாதீனமாக மேற்கொண்ட ஆய்வில், விண்டேஜ் பதிப்பகத்தின் முகவரி, 70/75, ஷெல்டன் வீதி, கான்வென்ட் கார்டன், லண்டன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முகவரியையும் இணைய வாயிலாக ஆய்வு செய்தபோது, அந்த முகவரியில் Vintage Press Limited என்ற பதிப்பகம் செயல்படுவதற்கான எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என்று பிரேம்குமார் மற்றும் சதீஷ்குமார் தெரிவித்தனர். இந்நிலையில், விண்டேஜ் பதிப்பகத்தின் 257 புத்தகங்களும் நூலகத்திலிருந்து  (நவ. 13) அகற்றப்பட்டன.

பிபிசியிடம் பேசிய பிரேம்குமார், ”அகல் விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களால் பொய்யான எழுத்தாளர்கள் பெயர்களில் ஏஐ உதவியுடன் போலியான நூல்கள் தயாரிக்கப்பட்டது போன்று இந்த புத்தகங்களும் தயார் செய்யப்பட்டிருக்கலாம் என்பதே எங்கள் சந்தேகம்” என்றார்.

வல்லுநர் குழு

தமிழ்நாட்டிலுள்ள நூலகங்களுக்கு புத்தகங்களைப் பரிந்துரைக்க 137 வல்லுநர்கள் அடங்கிய 30 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. வல்லுநர் குழு பரிந்துரைத்து அனுப்பிய அதை தேர்வுக்குழு உறுதி செய்து, கொள்முதல் குழுவுக்கு அனுப்பியுள்ளது. அந்த குழு தரும் பட்டியலை உயர்மட்டக்குழு இறுதி செய்த பின்பே, புத்தகங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.

சதீஷ்குமார் கூறும்போது, ”ஆங்கில நூல்களைப் பொறுத்தவரை, வல்லுநர்கள் குழுக்களிடம் பட்டியல் பெறப்பட்டிருக்கும். அந்த வழிகாட்டுதல் பட்டியல், புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிலையங்களிலிருந்தும், பிற நூலகங்களிலிருந்தும் பெறப்பட்டிருக்கலாம். அவற்றில் இந்த போலி புத்தகங்கள் இருந்திருந்தால் அவை இங்கே வந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஆங்கில நூல்களைப் பரிந்துரைக்க சிறப்புக்குழு இல்லாதது ஒரு குறைபாடுதான்.” என்றார்.

”மொத்தம் 10 ஆயிரம் புத்தகங்களின் தலைப்புகளைக் கொடுத்து, அவற்றிலிருந்து 2 ஆயிரம் புத்தகங்களைத் தேர்வு செய்வது சாத்தியமற்றது. இந்த போலி ஆங்கிலப் புத்தகங்களில் சுற்றுலா சார்ந்து நிறைய புத்தகங்கள் உள்ளன. வல்லுநர் குழுக்களில் சுற்றுலாத்துறை சார்ந்து யாராவது வல்லுநர்கள் இருந்தார்களா, அவர்கள் இந்த புத்தகங்களைப் பரிந்துரை செய்தார்களா என்பதை விசாரிக்க வேண்டும்” என்றார் சதீஷ்குமார்.

கோவை பெரியார் அறிவுலகத்தில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சிறப்பு நூலகங்கள் மற்றும் பொது நூலகங்களில் உள்ள புத்தகங்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வதற்கு உள் தணிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கன்னிமாரா நூலகத்திலிருந்து 523 புத்தகங்கள் உட்பட சென்னை, கோவை, தென்காசி, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து ரூ.91 லட்சம் மதிப்புள்ள 26 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் அகற்றப்பட்டிருப்பதாக தமிழக அரசால் தகவல் பகிரப்பட்டுள்ளது.

எழுத்து என்பது ஓர் ஆன்மீகத் தேடல் போன்றது. அதில் போலித்தனம் நீண்ட நாள் நிலைக்காது. காகிதப் பூக்கள் ஒருபோதும் வாசனை தருவதில்லை. அதுபோலவே போலி எழுத்தாளர்களால் அறிவுலகில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியாது.

போலிகள் களை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் விருப்பம்.