கோவை பீளமேடு ஏ.டி. காலனியைச் சேர்ந்த அசோக்குமார் – கவுசல்யா தேவி தம்பதியின் மகன் அகிலன் (16), அவிநாசி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.
கடந்த புதன்கிழமை பள்ளியில் நடைபெற்ற பிரார்த்தனையின்போது, சக மாணவர்கள் சாதிப் பெயரைக் கூறி அகிலனைக் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அகிலன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், பள்ளியில் மாட்டிறைச்சி சாப்பிடும் மாணவர்கள் யார் என ஆசிரியர் கேட்டபோது, அகிலன் எழுந்து நின்றதாகவும், அதன்பிறகு சில மாணவர்கள் அவரைத் தனிமைப்படுத்திக் கிண்டல் செய்ததாகவும் புகார் எழுந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் இரு மாணவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். ஆசிரியர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அகிலனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போலீஸார் நடத்தும் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், வழக்கில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டம் ஆறாவது நாளாகத் தொடர்ந்த நிலையில், வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மாணவர் அகிலன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



Leave a Reply