இந்து மதத்தையும் கோயில்களையும் இழிவுபடுத்தினால் கடும் நடவடிக்கை! – கோவை காவல் ஆணையரிடம் இந்து முன்னணி அதிரடி புகார்!

Spread the love
சமூக வலைதளங்களில் இந்து மதக் கடவுள்கள், மத நம்பிக்கைகள், கோயில்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பு குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். சதீஷ் அளித்த அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“இன்ஸ்டாகிராம் (Instagram), ஃபேஸ்புக் (Facebook) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்து மதக் கடவுள்கள், மத நம்பிக்கைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இந்து முன்னணி பேரியக்கம் குறித்து இழிவுபடுத்தும் வகையில் காணொளிகளும் கருத்துகளும் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன.
இந்து மதத்தினரையும் இந்து முன்னணி நிர்வாகிகளையும் இலக்கு வைத்துப் பரப்பப்படும் இத்தகைய அவதூறுகளால், மத உணர்வுகள் கடுமையாகப் புண்படுவதுடன், சமூகத்தில் மத நல்லிணக்கத்திற்கும் அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தல் உருவாகிறது.
எனவே, இந்தச் சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் காணொளிகளை உடனடியாக ஆய்வு செய்து, அவதூறு பரப்பிய நபர்களைக் கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சமூகத்தில் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கக் காவல் துறை தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது, இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் தசரதன், கோவை கோட்டச் செயலாளர் பாபா கிருஷ்ணன், நிர்வாகிகள் உருவை பாலன், குணா, மாவட்ட செய்தித் தொடர்பாளர் தனபால், மாவட்டப் பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், மாவட்டச் செயலாளர்கள் ஆறுச்சாமி, மகேஸ்வரன், தம்பி சரவணன், சோமசுந்தரம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.