இனிமேலும் சாக்குப்போக்குகளைக் கூறாமல், தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கத்தை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநகராட்சிகளில் பாஜக சார்பில் போதை ஒழிப்பு யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
தன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் கணபதி பகுதியிலிருந்து ரூட்ஸ் கம்பெனி வரை சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்குப் போதை ஒழிப்பு யாத்திரை நடைபெற்றது. கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த யாத்திரைக்கு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்ராசு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சிறுபான்மை அணியின் தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் யாத்திரையை முன்னின்று நடத்தினார்.
இந்த யாத்திரையில் நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் தேசியக் கொடிகளுடனும், போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் வேலூர் இப்ராஹிம் பேசியதாவது:
கடந்த திமுக ஆட்சியைப் போலவே தவெக ஆட்சியிலும் தமிழகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் தாராளமாக உள்ளது. ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர் சமீபத்தில் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களை மத்தியப் புலனாய்வு அமைப்புகள் மட்டுமே கைது செய்கின்றனவே தவிர, தமிழகக் காவல்துறை போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு எந்தவிதமான தீவிர நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இனிமேலாவது ஆளும் தவெக அரசு தமிழகத்தில் போதைப்பொருட்களைக் கட்டுக்குள் கொண்டு வரக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் விஜய் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Leave a Reply