“154 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட கொலைகள்!” – தவெக ஆட்சி மீது நயினார் நாகேந்திரன் அதிரடிப் புகார்!

Spread the love

கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், 1989-ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக் கட்சியே இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று வருவதாகவும், அதே பாணியில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே வெற்றி பெற்ற வேட்பாளர், அப்பதவியிலிருந்து விலகி மாற்றுக் கட்சியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், “இதனை ஆரோக்கியமான ஜனநாயகமாகக் கருத முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறக் கூடாது என்பதே எனது கருத்து. நியாயமாகச் சிந்திக்கும் அனைவரின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும்” என்றார்.

மேலும் பேசிய அவர், “இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்; மக்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால், இது அவர்களின் சுயநலத்தையே காட்டுகிறது. குதிரை பேரம் நடைபெற்றதால்தான் இந்தத் தேர்தலே வந்தது என்ற நிலையில், அவர்களின் சுயநலத்திற்காக மீண்டும் ஒரு தேர்தல் நடத்தப்பட்டதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இனிமேலாவது மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, சுயநலத்துடன் செயல்படக் கூடாது” என்று அறிவுறுத்தினார்.

ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதிகளில் தற்போது அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது குறித்த கேள்விக்கு, “இரண்டாவது இடம், மூன்றாவது இடம் என்பதையெல்லாம் பார்க்க வேண்டியதில்லை; வெற்றி, தோல்விகளை மட்டுமே பார்க்க வேண்டும். எந்தவித வலுவான காரணமும் இல்லாமல் நடைபெற்ற தேர்தல் இந்த இடைத்தேர்தல்” எனக் கூறினார்.

“அதிமுக, பாஜகவின் கிளையாகச் செயல்பட்டதால்தான் தோல்வியடைந்தது” என்று அமைச்சர் வன்னியரசு கூறியது குறித்த கேள்விக்கு, “ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதையாக இருக்கிறது” என்ற பழமொழியைக் குறிப்பிட்டுப் பதிலளித்தார். “இவர்கள் எல்லாம் நேற்று அரசியலுக்கு வந்தவர்கள். முன்பு பாஜகவை யாரும் கூட்டணியில் சேர்க்காத நிலையில், பின்னர் அதிமுகவுடன் இணைந்து மத்திய ஆட்சி அமைத்தது. திமுகவும் பாஜக கூட்டணியில் இருந்த வரலாறு தெரியாமல் சிலர் பேசுகிறார்கள்” என விமர்சித்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்கும் நிலையில், இடைத்தேர்தலில் அவர்களுக்கு எதிராகப் போட்டியிட்டு விமர்சித்தது குறித்த கேள்விக்கு, “ஆளும் கட்சிக்கு எதிராக அவர்கள் உண்மையைத்தான் பேசுகிறார்கள்” என்றார்.

“கடந்த பொதுத்தேர்தலில் விஜய் ஐந்து தொகுதிகளுக்கு மட்டுமே சென்று பிரசாரம் செய்தார். ஆனால், இம்முறை ஒரே தொகுதியில் 39 இடங்களில் இறங்கி, வீதி வீதியாகப் பிரசாரம் செய்துள்ளார். வாக்குகளுக்குப் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இடைத்தேர்தலை மட்டும் வைத்து வாக்கு சதவீதத்தைக் கணக்கிட முடியாது. ஆரம்பத்தில் விஜய் வீட்டிற்குள் இருந்தார்; நாங்கள் அவரை வெளியே வருமாறு கூறினோம், இப்போது அவர் வீதிக்கு வந்துள்ளார். இந்த விஷயத்தை அவரிடமே எடுத்துக்கூறியுள்ளோம்” என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் நான்கு மாத கால ஆட்சி குறித்த கேள்விக்கு, “ஐயையோ, மீண்டும் மீண்டும் என்னைச் சொல்ல வைக்கிறீர்களே! கடந்த 154 நாட்களில் 200-க்கும் மேற்பட்ட கொலைகளும் பாலியல் வன்கொடுமைகளும் நடைபெற்றுள்ளன. இதில் தவெகவைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர். காவல் நிலைய மரணங்கள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மின்வெட்டு, குடிநீர்ப் பற்றாக்குறை, கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் இல்லாமை எனப் பல பிரச்சினைகள் உள்ளன. அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதால், எதிர்காலத்தில் தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமடையும்” எனக் குற்றம்சாட்டினார். அத்துடன், “நீங்களாவது முதலமைச்சரைப் பேச வைத்தால் உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்” என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செவிலியர்களின் போராட்டம் மற்றும் பணி நிரந்தரம் தொடர்பான வாக்குறுதி குறித்த கேள்விக்கு, “எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும், ஆளும் கட்சியாக வந்த பிறகு மற்றொரு நிலைப்பாடும் எடுக்கிறார்கள். ஆளும் கட்சியாகப் பொறுப்பேற்ற பிறகு தவெகவுக்கான மக்கள் ஆதரவு சரிந்துள்ளது; இல்லையெனில் 30 முதல் 40 இடங்களுக்குச் சென்று பிரசாரம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. இனிவரும் காலங்களில் அவர்களின் செல்வாக்கு மேலும் சரியும்” என்றார்.

SIR விவகாரம் குறித்துப் பேசிய அவர், “தேர்தல் அதிகாரி ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து மீண்டும் மீண்டும் விளக்க வேண்டியுள்ளது. சுமார் 12 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதில் 2 கோடி பேர் உயிரிழந்தவர்கள். எங்கள் வீட்டிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் சொர்க்கத்திலும் நரகத்திலும் இருக்கும் நிலையில், ராகுல் காந்தி அவர்களை அழைத்து வந்து வாக்களிக்க வைக்க வேண்டும் என்கிறார். ராகுல் காந்தியையே அங்கு அனுப்பி அனைவரையும் அழைத்து வரச் சொல்லலாம்” என கிண்டலாகக் கூறினார்.

ராகுல் காந்தியின் சென்னை வருகை குறித்துத் தொடர்ந்தவர், “ராகுல் காந்தி சென்னைக்கு வந்து முதலமைச்சர் வீட்டில் உணவருந்துவது முதலமைச்சருக்கு நேர விரயமே. முதலமைச்சர் மக்கள் மத்தியில் நடிக்கிறார் என்றால், ராகுல் காந்திக்கு நடிக்கக்கூடத் தெரியவில்லை; தடுப்புவேலிகள் மீது ஏறி சங்கிலியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார். ராகுல் காந்தி இந்தியாவை விட்டு வெளியேறி இத்தாலியில் குடியேறினாலே இந்தியாவுக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது” என விமர்சித்தார்.

நாளை பிரதமர் நரேந்திர மோடியின் வருகை குறித்துப் பேசுகையில், “பிரதமர் தனது 25 ஆண்டுகால பொதுவாழ்வு/அரசியல் பயணத்தை நிறைவு செய்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை உலக அளவில் உயர்த்தியவர்; தமிழகத்திற்குப் பல்வேறு மெட்ரோ ரயில் திட்டங்களைக் கொண்டு வந்தவர். நாளை காலை 10 மணிக்கு சென்னை வரும் பிரதமர், போரூரிலிருந்து மெட்ரோ ரயிலில் பூந்தமல்லிக்குச் சென்று ஆய்வு செய்கிறார். பின்னர் சென்னை ஐஐடியில் மூளை ஆராய்ச்சி ஆய்வைத் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும், ரூ.65,000 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் ரூ.75 கோடி மதிப்பிலான ரயில் நிலையங்கள் புதுப்பிப்புத் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *