தமிழ்நாடு அரசின் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சம்பத்குமார் தொடங்கி வைத்தார். இதையொட்டி, பெண்களுக்கு பயணச்சீட்டு, இனிப்பு மற்றும் மலர்களை வழங்கி பேருந்து பயணத்தைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முதலமைச்சரின் தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் தமிழகத்தில் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளதாக தெரிவித்தார். பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேறும்போது குடும்பமும், சமுதாயமும், நாடும் முன்னேறும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
கோவை கோட்டத்தில் திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பயன்பெறும் வகையில் 2,108 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புறம், புறநகர் மற்றும் மலைப்பாதைகளில் மட்டும் 790 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதன்மூலம் சுமார் 4 லட்சம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் பயனடைவார்கள் என்றும் கூறினார்.
மேலும், பெண்களின் இலவச பேருந்துப் பயணத்தை “ஓசி பயணம்” என கேலி செய்து பெண்களை இழிவுபடுத்தியவர்களுக்கு மக்கள் தங்களது தீர்ப்பின் மூலம் பாடம் புகட்டியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். பெண்களுக்கு பேருந்துகளில் உரிய பாதுகாப்பும் மரியாதையும் வழங்கப்படுவதை உறுதி செய்ய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பேருந்து இயக்கத்தில் ஏற்படும் நடைமுறைத் தாமதங்கள் மற்றும் பிற பிரச்சினைகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருவதாகவும், எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறுகள் மக்களின் தீர்ப்புக்கு முன்பாக எடுபடாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். வரவிருக்கும் தேர்தல்களிலும் வெற்றியைப் பதிவு செய்வோம் எனவும் அவர் கூறினார்.



Leave a Reply