மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் விக்னேஷ்; கோவையில் காமராஜர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்!

Spread the love

சென்னையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த காமராஜர் காலை உணவு திட்டம், கோவை மாவட்டத்திலும் தொடங்கி வைக்கப்பட்டது. மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் மலுமாச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளுடன் அமைச்சர் விக்னேஷ் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர், அவர்களின் கல்வி, பள்ளியில் உள்ள வசதிகள், விளையாட்டு மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம் மற்றும் உணவு தயாரிக்கப்படும் முறைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மாணவர்கள் காலை உணவை தவறாமல் சாப்பிட்டு, ஆரோக்கியத்துடன் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
காலை நேரத்தில் மாணவர்கள் உணவு உண்ணாமல் பள்ளிக்கு வருவதைத் தடுப்பதுடன், அவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி நலனை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சத்தான மற்றும் தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

சென்னையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த இந்த திட்டம், கோவை மாவட்டத்திலும் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், மலுமாச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் மாணவிகளுடன் அமைச்சர் அமர்ந்து உணவு சாப்பிட்டது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கவனத்தை ஈர்த்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *