மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளில் துல்லியத்தை மேம்படுத்தும் வகையில், கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இந்தியாவின் முதல் ‘ஸ்ட்ரைக்கர் மேக்கோ 4’ ரோபோடிக் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கோவை ஹோட்டல் லீ மெரிடியனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ரோபோடிக் அமைப்பைத் தொடங்கி வைத்தார். ராயல் கேர் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் க. மாதேஸ்வரன், ஸ்ட்ரைக்கர் இந்தியா துணைத் தலைவர் அமன் ரிஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டாக்டர் க.மாதேஸ்வரன் கூறுகையில், நோயாளி களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கும் நோக்கில் நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகப் படுத்தி வருவதாகவும், புதிய ரோபோடிக் தொழில்நுட்பம் கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு மேம்பட்ட எலும்பியல் சிகிச்சை வழங்க உதவும் என்றும் தெரிவித்தார்.
ராயல் கேர் மருத்துவமனையின் மூத்த எலும்பியல் ஆலோசகரும், ரோபோ உதவியுடன் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ராஜ்குமார் நடேசன் கூறுகையில், நோயாளியின் உடல் அமைப்புக்கு ஏற்ப அறுவை சிகிச்சையைத் திட்டமிட்டு அதிக துல்லியத்துடன் மேற்கொள்ள இந்த அமைப்பு உதவும் என்றார். மேலும், சிக்கலான மறுசீரமைப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ளும் திறன் இதன் முக்கிய சிறப்பம்சம் எனத் தெரிவித்தார்.
இந்தத் தொழில் நுட்பத்தின் மூலம் பகுதி மற்றும் முழு முழங்கால் மாற்று, இடுப்பு மாற்று, தோள்பட்டை மாற்று மற்றும் சிக்கலான மறுசீரமைப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். அறுவை சிகிச்சையின்போது நிகழ்நேரத் தகவல்கள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் இந்த அமைப்பு வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.
ராயல் கேர் மருத்துவமனை பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது. மேலும், சுமார் 7 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய மருத்துவமனை வளாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் 1,100-க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் தோல் வங்கி, எலும்பு வங்கி, கண் வங்கி, மூளை மறுவாழ்வு மையம், முதுகெலும்பு மையம், தீக்காய சிகிச்சைப் பிரிவு மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகள் இடம்பெற உள்ளன.
மருத்துவமனை யின் தலைமை இயக்க அதிகாரி மருத்துவர் கே.டி மணி செந்தில்குமார், சீனியர் ஜி.எம். மார்க்கெட்டிங் வெங்கடேசன் உடன் இருந்தனர்.
ராயல் கேர் மருத்துவமனையில் இந்தியாவின் முதல் ‘மேக்கோ 4’ ரோபோ துவக்கி வைத்தார் அமைச்சர் அருண்ராஜ்



Leave a Reply