தமிழக சட்டமன்றத்தில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தார்.
சட்டமன்றத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளதாகக் குறிப்பிட்டார். பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள இடம் அல்லது மேற்கு புறவழிச்சாலை (Western Bypass) அருகில் உள்ள நிலங்கள் என இரண்டு பொருத்தமான இடங்களை அரசு பரிசீலிக்கலாம் என்று யோசனை தெரிவித்தார்.
மேலும், அந்தப் பகுதியில் சுமார் 99 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கான ஆவணங்கள் மற்றும் சான்றுகளை அமைச்சரிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். நடப்பு ஆட்சி காலத்திலேயே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி தர வேண்டும் எனவும் அவர் பேரவைத் தலைவர் வாயிலாக அரசைக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், கோவையில் சர்வதேச அளவிலான விளையாட்டு வளாகம் / கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பான கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், அதிமுக ஆட்சிக்காலத்தில் இத்திட்டம் PPP (Public-Private Partnership) முறையில் கொண்டு செல்லப்பட்டு தனியார் நிறுவனங்களின் ஆர்வம் இன்மையால் தாமதமானதாகச் சுட்டிக்காட்டினார். சட்டமன்ற உறுப்பினரின் இந்தக் கோரிக்கை குறித்து அரசு உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்தார்.



Leave a Reply