கோவையில் குடியிருப்புக்குள் புகுந்த அரிய எறும்புத்திண்ணி – வனத்துறையினர் பத்திரமாக மீட்பு

Spread the love
கோவை மருதமலை வனப்பகுதியை ஒட்டிய கஸ்தூரி நாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதிக்குள் வழிதவறி வந்த அரிய வகை எறும்புத்திண்ணியை வன உயிரின மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

மருதமலை வனச்சரகத்துக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வெளியே வந்த எறும்புத்திண்ணி, வழிதவறி கஸ்தூரி நாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. குடியிருப்புப் பகுதியில் அந்த விலங்கு உலா வந்ததைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக வன உயிரினப் பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் விரைந்து வந்த மீட்புக் குழுவினர், எறும்புத்திண்ணிக்கு எவ்வித காயமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக அதனைப் பிடித்தனர். பின்னர் மீட்கப்பட்ட எறும்புத்திண்ணி மருதமலை பகுதி வனக்காவலர் சரவணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் எறும்புத்திண்ணியின் உடல்நிலையைப் பரிசோதித்தனர். அதற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அதனை மருதமலை அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக கொண்டு சென்று விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.