தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவை காந்திபுரத்தில் திமுகவினர் தீவிர சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதைத் தொடர்ந்து, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் உடனடியாக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி, காந்திபுரம் அண்ணா சாலை முன்பாக திரண்ட ஆயிரக்கணக்கான திமுகவினர், தமிழக அரசு மற்றும் காவல்துறையைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, அண்ணா சாலையில் இருந்து திரளான தொண்டர்கள் பேரணியாகப் புறப்பட்டு காந்திபுரம் பிரதான சாலைக்குச் சென்றனர். அங்கு போலீஸாரின் தடையை மீறி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென நடைபெற்ற சாலை மறியலால் காந்திபுரம் பிரதான சாலை மற்றும் சுற்றுவட்டார இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீஸார் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சிலரை குண்டுகட்டாகத் தூக்கியும், தள்ளுமுள்ளுக்கு இடையே இழுத்துச் சென்றும் காவல் வாகனங்களில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன், திமுக முன்னாள் மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் நடைபெற்ற இந்த திடீர் போராட்டத்தால் காந்திபுரம் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.



Leave a Reply