கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், சுமார் ரூ.84.26 லட்சம் மதிப்பிலான பல்வேறு மக்கள் நலத் திட்டப் பணிகளை முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்ததுடன், நிறைவடைந்த பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க மற்றும் திறப்பு விழாக்களில் பங்கேற்ற அவர், புதிய திட்டங்களுக்கு பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், நிறைவடைந்த திட்டங்களை அதிகாரப்பூர்வமாக மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
வேடபட்டி பேரூராட்சி 6-வது வார்டு நாகராஜபுரம் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.17.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையை திறந்து வைத்தார். தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் நிதியில் ரூ.17.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கான்கிரீட் நடைபாதை மற்றும் சிறுபாலத்துடன் கூடிய மழைநீர் வடிகால் வசதியையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
அதே பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொது கழிப்பிடத்தையும் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி 78-வது வார்டு ரங்கசாமி காலனியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
மேலும், 78-வது வார்டு செல்வபுரம் ஐயுடிபி காலனியில் உள்ள 528 குடியிருப்புகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில், மேற்குப் பகுதி மற்றும் தெற்குப் பகுதியில் ரூ.21.66 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் நிதியின் கீழ் பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் அதிமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தொண்டாமுத்தூரில் மக்கள் நலத் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி



Leave a Reply