மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை பயனளிக்காது: கிருஷ்ணசாமி

Spread the love

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்றும், மத்திய அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் நாடுவதுதான் சரியான வழி என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

கோவை குனியமுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி நீர் திறக்கப்படாததால் தமிழக டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 1-ஆம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிவித்தார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த பிறகும் அதை முழுமையாக நிறைவேற்றவில்லை என அவர் குற்றம்சாட்டினார். சில டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டாலும், அதற்கு மாற்றாக மணமகிழ் மன்றங்கள் திறக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அரசு மதுபான விற்பனையை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதாக கூறிய அவர், அது நடைமுறைக்கு வந்தால் கள்ளச்சாராய விற்பனை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார்.

மருத்துவப் படிப்புகளில் 151 இடங்கள் மத்திய அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட விவகாரத்திலும் அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், இதற்கு காரணமான அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் காவிரி விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டில் செயல்படுகிறது என்றும், அதுபோல தமிழகத்திலும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டார்.