காவல்நிலைய இறப்புகளை தடுப்பது எப்படி?

Spread the love

தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் அருணாசலம் என்ற இளைஞர் கடந்த 17ம் தேதி சட்டவிரோத மது விற்பனை வழக்கில் தூத்துக்குடி தென்பா போலீஸ் நிலைய போலீசாரால் அழைத்து செல்லப்பட்டவர் 23 ந்தேதி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார். 4 போலீசார் அருணாசலத்தை தாக்கியதால் அவர் உயிர் இழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த 13ந்தேதி நாகர்கோவில் சிறையில் இருந்த குட்கா வழக்கில் கைதான சபரி வர்மன் என்பவர் சிறை ஊழியர்கள் மற்றும் கைதிகள் தாக்கியதில் உயிர் இழந்தார். சிவகங்கையில் 2025ல் காவலர் அஜித்குமார் காவலர்கள் தாக்கி சித்ரவதைக்கு உள்ளாக்கியதால் உயிர் இழந்தார். 2020 ல் சாத்தான் குளம் ஜெயராஜ் -பென்னிக்ஸ் போலீசாரின் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்களுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டனர். 2026 ம் ஆண்டு மார்ச் 15 வரையிலான காலத்தில் மட்டுமே தமிழகத்தில் 7 சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சிகாலத்தின் போது மட்டும் 35 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்து உள்ளது. புதிய முதல்வர் ஆட்சி காலத்திலும் லாக்கப் மரணங்கள் நடைபெற்று வருவது நிர்வாக சீர்கேட்டையும், காவல் துறையின் அத்துமீறலையும் வெளிப்படுத்தும் விதமாகவே உள்ளது. சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய குற்றவாளிகளை காவலர்களே தண்டனை அளிப்பது ஏற்புடையது ஆகாது.இது காவல்துறை மீதான நம்பகதன்மையினை சீர்குலைப்பதோடு குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகவே உள்ளது.
உச்சநீதிமன்றம் டி.கே. பாசு வழக்கில் கடந்த 1996ம்ஆண்டு காவல் நிலைய சித்ரவதைகள், லாக்கப் மரணங்கள் தடுக்க 11 கட்டாய வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. இவை அரசியல் அமைப்பின் படி வாழ்வுரிமை, உரிமைகள் அடிப்படையில் அமைந்தவை. இவை போலீசாருக்கு மட்டுமில்லாது CBI, ED, CRPF போன்ற அனைத்து சட்ட அமலாக்க அமைப்புகளுக்கும் பொருந்தும். இதனை சட்டபூர்வமாக பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உட்படுத்தலாம்.
இத்தகைய வழிகாட்டுதல்கள் காவல்துறையினரால் கடைபிடிக்கப் படுவதில்லை. இதனால் காவல் மற்றும் சிறை மரணம் தொடர்கதையாகிறது. அனைத்து காவல் நிலைய லாக்கப் விசாரணை அறைகளில் CCTV பொருத்தப்பட வேண்டும். மனித உரிமை மற்றும் சட்டபூர்வ காவல் நடைமுறை பயிற்சி போதுமானதாக இல்லை. எனவே காவலர்களுக்கு இதற்கான முறையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் அமுல்படுத்துவதோடு அதனை கண்காணிக்க வேண்டும். தேசிய மனித உரிமை ஆணைய அறிவுறுத்தல்கள் காவல்துறையினரால் நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.