கோவை எஸ்.பி.ஐ. வங்கி பகுதியில் இருந்து ரயில் சந்திப்பை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள், “நீட் தேர்வை ரத்து செய்”, “ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். மேலும், டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி அதையும் கண்டித்தனர்.
ரயில் நிலையத்தை நோக்கி முன்னேறிய போராட்டக்காரர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இருப்பினும், தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்றதால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய திராவிடத் தமிழர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதி தமிழன், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் மீண்டும் தனி மசோதாவை நிறைவேற்றி, அதற்கு ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நீட் தேர்வை ரத்து செய்வதில் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், தமிழகம் முழுவதும் அடுத்தகட்ட போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் ஆதி தமிழன் எச்சரித்தார்.



Leave a Reply