கோயம்புத்தூர் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் கே. ரெட்டி தலைமையில் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், தனிப்படை உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் கருமத்தம்பட்டி நான்கு சாலை மேம்பாலம் கீழ் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பெங்களூருவில் இருந்து வந்த மாருதி சுசூகி ரிட்ஸ் காரை நிறுத்தி சோதனையிட்டபோது, காரின் ரகசியப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 70 கிராம் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், போதைப்பொருள் மற்றும் மனநிலை மாற்றும் பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில், பாலக்காட்டைச் சேர்ந்த அஜ்மல் (29), அபுதாஹிர் (24) (சாய்பாபா காலனி), பாலாஜி (26) (வீரபாண்டி), முகமது அலி (27) (பாலக்காடு) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்தக் கடத்தலுக்குப் பின்னால் செயல்பட்ட 5 பேர் கொண்ட நெட்வொர்க் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
பெங்களூருவில் இருந்து கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்தும் வலையமைப்பை முறியடிக்கும் நடவடிக்கையாக இந்த பறிமுதல் அமைந்துள்ளதாகவும், சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave a Reply