முதல்வர் விஜய்க்கு கவசமாக இருப்பேன்: கோவையில் வைகோ பேட்டி

Spread the love

மேகதாது அணைத் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசை மத்திய அரசே தூண்டிவிடுவதாகவும், எதிர்க்கட்சிகளின் தாக்குதல்களில் இருந்து முதல்வர் விஜய்க்கு தாம் கவசமாக இருப்பேன் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சமீபத்தில் பத்திரிகையாளர்களுடன் ஏற்பட்ட சர்ச்சை குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்தார்.

குறிப்பிட்ட ஒரு நாளிதழின் நிருபர் தொடர்ந்து தம்மை புண்படுத்தும் வகையில் கேள்வி எழுப்பியதாகவும், ஆரம்பத்தில் பொறுமையாக பதிலளித்ததாகவும் கூறிய வைகோ, பின்னர் கருவேல மரங்களை அகற்றும் பணியின் போது மீண்டும் அதே நாளிதழின் நிருபர் அவமரியாதையாக கேள்வி எழுப்பியதாக குற்றம்சாட்டினார். பத்திரிகையாளர்களுக்கு இருப்பதைப் போல தமக்கும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் உள்ளதாகவும், பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து வருத்தம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து அரசியல் சூழல் குறித்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைத்த பிறகும் அந்த அரசை நிலைக்க விடாமல் கேலி செய்து, ஆட்சி கவிழும் என சிலர் கருத்து தெரிவிப்பதாக குற்றம்சாட்டினார். இந்திய அரசியலமைப்பின் 356-வது பிரிவை நீக்க வேண்டும் என்பது மதிமுகவின் நீண்டகால நிலைப்பாடு என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆளுநர் ஆட்சியை கொண்டு வர முயற்சிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

திமுகவை மறைமுகமாக விமர்சித்த அவர், “கம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக உறுப்பினரை ராஜினாமா செய்ய வைத்தது திமுகதான். தற்போது ஜனநாயகம் குறித்து அவர்கள் பேசுவதற்கு என்ன தகுதி உள்ளது?” என்று கேள்வி எழுப்பினார்.

தற்போதைய தவெக ஆட்சியைப் பாராட்டிய வைகோ, “இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஊழல், கமிஷன் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு இடமில்லை. லஞ்சத்தை ஒழித்திருப்பதே இந்த அரசின் மிகப்பெரிய சாதனை. ஆட்சியை இழந்தவர்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்” என்றார்.

தவெகவுக்கு ஆதரவு அளிப்பதால் தம்மீது அரசியல் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், கடந்த காலத்தில் கூட்டணி தர்மத்தை மதித்து திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோதும் அவமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்றும் கூறினார்.

மேகதாது அணைத் திட்டம் குறித்து பேசிய வைகோ, “மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசை மத்திய அரசே தூண்டிவிடுகிறது. இதற்கு மோடி அரசுதான் காரணம். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும், “எதிரணியில் இருந்து முதல்வர் விஜய் மீது வரும் அனைத்து அரசியல் தாக்குதல்களுக்கும் எதிராக நான் கவசமாக இருப்பேன். தவெக அரசை பாதுகாப்பது ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு சமம்” என்றும் வைகோ தெரிவித்தார்.