அதிமுகவில் இருந்து விலகுபவர்களை, மாநகராட்சி நாய் பிடிக்கும் வண்டியில் நாய்களைப் பிடித்து செல்வதைப் போல தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வாரந்தோறும் அழைத்துச் சென்று கட்சியில் இணைத்து வருவதாக, அதிமுக கோவை மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், கோவை மாநகராட்சி அதிமுக மன்றக் குழுத் தலைவருமான பிரபாகரன் கடுமையாக விமர்சித்தார்.
அதிமுக கோவை மாநகர் மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் மாவட்டத் தலைமையகமான ‘இதய தெய்வம் மாளிகை’யில் நடைபெற்றது. இதில், அதிமுகவின் தற்போதைய அரசியல் நிலை, கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்கள், கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் பேசிய பிரபாகரன், “அதிமுகவில் இருந்து மாற்றுக் கட்சிகளுக்குச் செல்பவர்கள், கட்சியின் மூலம் பதவி, பணம், புகழ் ஆகியவற்றைப் பெற்று விட்டு, சுயநலத்திற்காக வெளியேறுகிறார்கள். வாரம் தோறும் அதிமுக அழிந்துவிட்டதாக கூறி, கார்ப்பரேஷன் நாய் பிடிக்கும் வண்டியில் நாய்களைப் பிடித்துச் செல்வதைப் போல மாற்றுக் கட்சியினரை தவெகவில் சேர்த்து வருகிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.
தொண்டர்களின் உழைப்பால் உயர்ந் தவர்கள், தங்களது குடும்பத்திற்குச் சொத்து களைச் சேர்த்துக் கொண்டு, தொண்டர்களின் உழைப்பை பயன்படுத்தி விட்டு பொறுப்பின்றி கட்சியை விட்டு வெளியேறுவதாகவும் அவர் விமர்சித்தார்.
அண்மையில் அதிமுகவை விட்டு விலகிய முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்களை மறைமுகமாக குறிப்பிட்ட அவர், “ஒருவர் குடிகாரன் என்று பேசுகிறார்; இன்னொருவர் கட்சி இல்லையென்றால் தோல்வியடையும் என்கிறார்; ஒருவர் ‘புதிய தொடக்கம், புதிய மகிழ்ச்சி, புதிய பாதை’ என வீர வசனம் பேசுகிறார். ஆனால் அவர்கள் கட்சியில் சேர்ந்தபோது இருந்த சொத்து மதிப்பு என்ன? இன்று இருக்கும் சொத்து மதிப்பு என்ன? தொண்டர்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “பேரவையில் 250 நிர்வாகிகள் உள்ளனர். அவர்களில் இரண்டு பேர் மட்டுமே கட்சியை விட்டு சென்றுள்ளனர். ஆனால் பேரவையின் பெரும்பாலானோர் இன்னும் உறுதியாக அதிமுகவுடனே உள்ளனர்” என்றார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையை நினைவுகூர்ந்த அவர், “அம்மா அனைவரையும் ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால் அனைவரையும் நெருக்கமாக அனுமதித்ததே தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு காரணமாகியுள்ளது” என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி 70 வயதிலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சிக்காக உழைக்கிறார். ஆனால் அவர் உழைப்பால் வெற்றி பெற்றவர்கள் இன்று வேறு கட்சிகளுக்குச் செல்வது வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார்.
“அதிமுக பணக்காரர்களை நம்பி தொடங்கப்பட்ட கட்சி அல்ல; சைக்கிள் ரிக்ஷா ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் போன்ற சாதாரண மக்களை நம்பியே எம்.ஜி.ஆர். இந்தக் கட்சியை உருவாக்கினார்.
கோவையின் வளர்ச்சி நாயகன் என்றால் அது எஸ்.பி. வேலுமணிதான். இரட்டை இலை சின்னத்தின் மதிப்பு அவருக்குத் தெரியும் என்பதால்தான் அவர் இன்னும் தொண்டனாகவே இருக்கிறார்” என்று பிரபாகரன் கூறினார்.
மேலும், “எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாமல் மாற்றுக் கட்சிக்குச் செல்வது அரசியல் ஒழுக்கத்திற்கு எதிரானது. இரட்டை இலையில் இல்லாதது புதிய கட்சியில் என்ன இருக்கிறது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களின் மனநிலையை மாற்றி உள்ளனர். சிறு குழந்தைகள் கூட ‘டிவிகே, டிவிகே’ என்று கூறும் அளவிற்கு பிரசாரம் நடைபெறுகிறது. அந்த மாயையை உடைத்து மக்களிடம் உண்மையை எடுத்துச் செல்ல வேண்டும். இந்தத் தேர்தலில் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
இறுதியாக, “தவெக ஆட்சி அமைந்த பிறகு கோவைக்கு என்ன நன்மை கிடைத்துள்ளது? மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணியாவது ஒழுங்காக நடக்கிறதா? மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் பேரவை நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும், கட்சியினர் யாரும் மனம் தளர வேண்டாம் என்றும் உறுதியளித்தார்.
கார்ப்பரேஷன் நாய் பிடிக்கும் வண்டி போல் மாற்றுக் கட்சியினரை தவெக சேர்க்கிறது – பேரவை பிரபாகரன் கடும் விமர்சனம்



Leave a Reply