ஜூலை 26-ல் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி மாநிலம் தழுவிய ஆர்ப்​பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு

Spread the love

கோவை அருகே காட்டூரில் உள்ள இந்து முன்னணியின் தலைமை அலுவலகத்தில், அமைப்பின் மாநில செயலாளராக பணியாற்றிய வேலூர் வெள்ளையப்பனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கலந்து கொண்டு, வேலூர் வெள்ளையப்பன் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்து சமுதாயத்தின் எழுச்சி மற்றும் ஒற்றுமைக்காக வேலூர் வெள்ளையப்பன் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர். அவர் விட்டுச் சென்ற பணிகளை இந்து முன்னணி முழு அர்ப்பணிப்புடன் தொடர்ந்து முன்னெடுத்து செல்லும்,” என்றார்.

மேலும், தமிழகம் முழுவதும் கோவில்களில் வசூலிக்கப்படும் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் ஜூலை 26ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாகவும், கோவை மாநகரில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்து முன்னணியின் மகளிர் அமைப்பான இந்து அன்னையர் முன்னணி சார்பில் ஆடி மாதத்தை முன்னிட்டு மஞ்சள் நீராபிஷேக நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ், கோவை கோட்ட பொதுச் செயலாளர் பாபா கிருஷ்ணன், கோட்ட செயலாளர் உருவை பாலன், மாவட்டத் தலைவர் தசரதன், மாவட்ட செய்தித் தொடர்பாளர் தனபால், மாவட்ட செயலாளர்கள் ஆறுச்சாமி, மகேஸ்வரன் உள்ளிட்டோர் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *