கோடி மேல் கோடி… அன்பில் மகேசுக்கு சிக்கல்… வெடிக்கும் தனியார் பள்ளி விவகாரம்

Spread the love

தமிழக வெற்றி கழக முதலமைச்சர் விஜய்க்கு எப்படியாவது இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பலத்த நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பது திமுகவின் திட்டம். ஆனால், மக்கள் மன்றத்தில் அதைவிட மிகப்பெரிய நெருக்கடியை திமுகவுக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் விஜய். ஜூன் 16ஆம் தேதி தனியார் பள்ளிகளுக்கான என்ஓசி உள்ளிட்ட அனுமதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகள் கல்வியை வியாபாரம் செய்துக் கொண்டிருக்கின்றனர் என்ற கருத்து இருக்கிறது.
இருந்தாலும், குழந்தை களுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் எட்டாக்கனியாக இருப்பவருக்கும் கல்வியைக் கொடுக்கிறீர்கள். நீங்கள் கடந்து வந்த பாதை கரடுமுரடாக இருந்திருக்கலாம். நகைகளை அடமானம் வைத்தும், மிகுந்த சிரமங்களுக்கு இடையேயும் தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர்.
பள்ளிகளை நடத்துவது லாப கணக்கு அல்ல; புண்ணிய கணக்கு.எத்தனையோ தனியார் பள்ளி நிர்வாகிகள் என்னிடம் புலம்பி இருக்கிறார்கள். காசு கேட்டார்கள் என்று சொன்னார்கள். அதனை நாம் மாற்றுவோம் எனக் கூறினேன்.
இனிமேல் ஒரு பைசா கூட கொடுக்க வேண்டாம். எந்த கட்சி கேட்டாலும் தராதீர்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை தெரியும் என்று கூறிக் கொண்டு யார் வந்தாலும்கூட அவரை அருகிலே அனுமதிக்காதீர்கள்; வெளியே செல்லுங்கள் என கூறுங்கள். ஜூலை 1- ஆம் தேதி முதல் இணைய வழியாக மட்டுமே தனியார் பள்ளிகள் அனுமதிகள் பெற வழிவகை செய்யப்படும்.ஒரு சகோதரனாகக் கேட்கிறேன், தனியார் பள்ளிகள் முடிந்த வரை தங்களுடைய கட்டணத்தைக் குறையுங்கள்” என்று பேசினார்.
விழா முடிந்த பிறகு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பேசும்போது, ‘தனியார் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரம் கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக 2 ஆயிரம் பள்ளிகளுக்கு தேங்கிக் கிடந்தது. சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு என்.ஓ.சி. வாங்குவதற்கு 25 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் அமைச்சர் கொடுத்திருக்கிறார். இது கல்வித் துறையில் நடந்த புரட்சி.
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றனர்.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் 12, 500 நர்சரி முதல் மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. 2 ஆயிரம் சிபிஎஸ்சி பாடத் திட்ட பள்ளிகள் இருக்கின்றன. 2004 க்கு முன்பு வரை தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பிஞ்சு குழந்தைகள் கொல்லப்பட்டனர். இதனால் கடும் கோபம் அடைந்த அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா…
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் கொடுப்பதை ரத்து செய்தார்.பாதுகாப்பு ஏற்பாடுகளை எல்லாம் சரியாக செய்து 3 வருடங்களுக்கு ஒரு முறை அங்கீகாரத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பிறகுதான் தனியார் பள்ளிகள் அரசு நிர்வாகத்துக்கு கொஞ்சமாவது கட்டுப்பட்டு பயத்தோடு பாதுகாப்பு ஏற்படுகளை செய்தனர்.
இந்நிலையில் கடந்த 2021 இல் திமுக ஆட்சிக்கு வந்ததும் தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி. அரசகுமார், பொதுச் செயலாளர் நந்தகுமார் ஆகியோர் கூட்டம் போட்டு பள்ளி முதலாளிகளிடம் ஆலோசித்தனர்.நர்சரி பள்ளிகளில் இருந்து எட்டாம் வகுப்பு வரை அப்கிரேட் செய்வதற்கு ஒரு பள்ளிக்கு ஐந்து லட்சம் ரூபாய் என்றும்… ஜெயலலிதா ஒழித்த நிரந்தர அங்கிகாரம் என்பதை மீண்டும் அரசாணையாகக் கொண்டு வருவதற்கு ஒரு பள்ளிக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் வரையிலும் வசூல் செய்தனர். சில பள்ளி முதலாளிகள் பணம் தரவில்லை. ஆனாலும் குறைந்தபட்சம் ஆயிரம் பள்ளிகளுக்கு தலா பத்து முதல் இருபது லட்சம் ரூபாய் என்றால் எத்தனை கோடி பணம் வருகிறது. அவ்வளவு பணம் வசூல் செய்யப்பட்ட அப்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.
இதற்கு பலனாக கடந்த திமுக ஆட்சி முடியும்போது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் புதிதாக வந்த தவெக அரசு அதை செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது.திமுக ஆட்சியில் நடந்த பண வேட்டை பற்றிய புகார்கள் முதல்வருக்கு சென்ற நிலையில்தான்… முதல்வர் விஜய் இதை நிறுத்தி வைத்துள்ளார்.
இப்போது கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது, அது வேறு யாருக்கு பங்கு போடப்பட்டது என்பது பற்றிய விசாரணை நடந்து வருகிறது. விரைவில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் விசாரணை வளையத்துக்குள் வருவார் என கோட்டை வட்டாரத்தில் கூறுகின்றனர்.