ஆளுநருக்கு எதிராக கோவையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.
நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்கள் எண்ணிக்கை இல்லாததால் அரசியல் சூழலில் பரபரப்பு நிலவி வருகிறது.
ஆட்சியை அமைப்பதற்காக பல்வேறு கட்சிகளின் ஆதரவை தமிழக வெற்றி கழகம் நாடி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழக வெற்றி கழகத்தினர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை ஆளுநர் அழைப்பு விடுக்காததால் அரசியல் சூழல் பரபரப்பாகியுள்ளது.
இந்த நிலையில், பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்தால் போதுமானது என்ற கருத்துகள் பல்வேறு தரப்பிலிருந்து எழுந்துவரும் சூழலில், காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஆளுநர் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், ஆளுநர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.



Leave a Reply