தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு மொத்தமாக 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த மார்ச் 2ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற்ற தேர்வில் மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தேர்வு விடைத்தாள்கள் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை 150-க்கும் மேற்பட்ட மதிப்பீட்டு மையங்களில் ஆசிரியர்களால் திருத்தப்பட்டன. அதன் பின்னர் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.19 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. மாணவர்களை விட மாணவிகள் 3.81 சதவீதம் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து பிளஸ்-2 தேர்வு எழுதியவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர்களில் 238 பேர் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும், பள்ளிகள் வழியாக அல்லாமல் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியவர்களில் 6 ஆயிரத்து 171 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 98.07 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் 98.05 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தையும், கன்னியாகுமரி மாவட்டம் 97.63 சதவீதத்துடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி அரசு இணையதளங்கள் வாயிலாக அறிந்து வருகின்றனர்.



Leave a Reply