நீட் தேர்வு எழுதுவதற்காக கடலூரில் இருந்து மாணவி ஒருவருடன் குடும்பத்தினர் காரில் கோவைக்கு வந்தனர். விராலியூர் அருகே சென்றபோது, எதிரெதிரே வந்த பேருந்தும் காரும் மோதியதில், காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது.
இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் இந்த தகராறு கைகலப்பாக மாறி, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த சம்பவத்தால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது. தாக்குதலில் காயமடைந்ததாக கூறி பேருந்து ஓட்டுநர் ரவிக்குமார் மற்றும் நடத்துனர் பத்மநாபன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த தொண்டாமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தாக்கப்பட்டதை கண்டித்து அந்த வழியாக சென்ற பிற அரசு பேருந்து ஓட்டுநர்களும் தங்கள் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இரவு நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பலர் தனியார் வாகனங்களை பயன்படுத்தி தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.



Leave a Reply