கோவையில் பறக்கும் படை சோதனை: ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.6.59 லட்சம் பறிமுதல்

Spread the love

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கேரள பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தில் ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.6 லட்சத்து 59 ஆயிரம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் காலத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்துச் செல்லும் போது அதற்குரிய ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் பணம் பறிமுதல் செய்யப்படும் என்றும், பின்னர் ஆவணங்கள் வழங்கப்பட்டால் பணம் திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படை குழுக்கள் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை ப்ரூக்ஃபீல்டு சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கேரள பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் ரூ.6 லட்சத்து 59 ஆயிரம் ரொக்கப் பணம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து வாகன ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோது, சாக்லேட் மற்றும் உணவுப் பொருட்கள் வாங்குவதற்காக அந்த பணத்தை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் கோவை மத்திய மண்டல தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் பணம் மீண்டும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *