நம்மில் சிலர் ஒரு நாளைக்குஅரை லிட்டர் தண்ணீர் கூட குடிப்பது இல்லை. இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சிறுநீரகங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
உங்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்சனைஇருந்தால் உணவில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் என்பது சிறுநீரகப் பிரச்சனைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. பதப்படுத்தப்பட்ட, துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் அதிகம் தேவைப்படும் உணவுகள், உப்பு அதிகமுள்ள உணவுகளை கண்டிப்பாக தவிர்த்துவிட வேண்டும்.
உங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், அது சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். ஆகவே, உங்கள் ரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க அதற்கு ஏற்ற உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.
சிறுநீரகத்தையும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க விரும்பினால் தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி இல்லை என்றால் 30 நிமிடங்கள் வரை வியர்க்க விறுவிறுக்க நடைபயிற்சி செய்யலாம். யோகா, சைக்கிள் ஓட்டுதலை செய்யலாம். இது உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, உங்கள் ரத்த அழுத்தத்தையும் இயல்பாக வைத்திருக்கும். இது உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக இருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மது அருந்துதல், புகைப் பழக்கம் ஆகியவை உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பதோடு சிறுநீரகத்தின் செயல்பாட்டினை மிகவும் மோசமாக்கும். ஆகவே, இந்த இரு பழக்கங்களையும் கைவிட்டுவிடுங்கள்.
6 மாதங்களுக்கு ஒருமுறை அத்தியாவசிய ரத்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதாவது, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் சிறுநீரக செயல்பாட்டு சோதனையை மேற்கொள்ள வேண்டும். இது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை தெரிந்துகொள்ள உதவுகிறது. தொடர்ந்து வயிற்று வலி அல்லது முதுகுவலி அல்லது சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.



Leave a Reply