வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ப்பதற்றம் காரணமாக வணிக சிலிண்டர்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் ஹோட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்ட உணவகங்கள் பாதிக்கப்பட்டு, சில இடங்களில் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வீட்டு பயன்பாட்டு கேஸ் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பி.எஸ்.என்.எல்அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர். போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு பிரச்சினையை விரைவாக தீர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது வணிக சிலிண்டரை மையமாக வைத்து அதற்கு மாலை அணிவித்து இறுதி சடங்கு நடத்துவது போன்று எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி குறித்த கேலிச்சித்திர பதாகைகளையும் ஏந்தி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதுகுறித்து பேசிய அமைப்பின் பொருளாளர் பத்மநாபன், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொழில்களை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார். மத்திய அரசு உடனடியாக தேவையான சிலிண்டர்களை கொள்முதல் செய்து நாடு முழுவதும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



Leave a Reply