கோவையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் – தேர்வு மையத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பவன்குமார்

Spread the love

தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும் 2025–2026 கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (மார்ச் 11) தொடங்கியது. இந்தத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கோவை மாவட்டத்தில் 159 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள 509 பள்ளிகளைச் சேர்ந்த 18,861 மாணவர்கள் மற்றும் 19,529 மாணவிகள் என மொத்தம் 38,390 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 1,237 தனித்தேர்வர்களும் தேர்வில் பங்கேற்று வருகின்றனர்.

தேர்வுகள் நடைபெற மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துள்ளது. வினாத்தாள்களை பாதுகாப்பாக வைத்திருக்க 11 பாதுகாப்பு மையங்களில் 22 அதிகாரிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்வு நாள்களில் 47 வழித்தடங்கள் மூலம் வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகின்றன.

தேர்வு மையங்களில் ஒழுங்காக தேர்வு நடைபெற 159 முதன்மை கண்காணிப்பாளர்கள், 2,075 அறைக் கண்காணிப்பாளர்கள், 250 நிலையான மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் 316 அலுவலக பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் வகையில் 946 ஆசிரியர்கள் எழுத்தாளர் (ஸ்கிரைப்) ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மைக்கேல் பள்ளியில் நடைபெற்று வரும் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் எந்த சிரமமும் இன்றி தேர்வு எழுத தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கோவையில் உள்ள சிலிண்டர் ஏஜென்சி நிர்வாகிகளுடன் கடந்த சனிக்கிழமை கூட்டம் நடத்தப்பட்டதாகவும், தற்போது மாவட்டத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்றும் கூறினார். தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்று ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் மதிய உணவு அருந்திய மாணவர்கள் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்ற சம்பவம் குறித்து, அனைத்து பள்ளிகளிலும் சமையலறைகள் மற்றும் வளாகங்களை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பள்ளிகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *