ஆனைமலை அருகே பெத்தநாயக்கனூரை சேர்ந்த காளிதாஸ் (38) என்பவரின் தந்தை மருதமுத்து (63) கடந்த 7ஆம் தேதி தென்சங்கம்பாளையம் சாலையில் உள்ள அட்டை தொழிற்சாலை அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அப்பகுதியில் சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருதமுத்து தனது மகன் காளிதாஸின் அலைபேசி எண்ணை மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தார். சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருதமுத்து மருத்துவமனையில் இருந்து தப்பித்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், மருதமுத்து உயிரிழந்துவிட்டதாகவும், உடலை பெற்றுச் செல்லுமாறும் கோவை அரசு மருத்துவமனையிலிருந்து காளிதாஸுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்து, இடுகாட்டில் குழி தோண்டியதுடன் இறுதிச்சடங்கிற்கான பொருட்களையும் வாங்கி வைத்தனர்.
பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்ட சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலத்தை எடுத்துக் கொண்டு ஊருக்கு திரும்பிய உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்யத் தயாராக இருந்தனர்.
அந்த நேரத்தில் சமத்தூர் பகுதியில் மருதமுத்து நடந்து சென்று கொண்டிருப்பதை சிலர் கண்டு வீடியோ எடுத்து அவரது மகன் காளிதாஸுக்கு அனுப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக இறுதிச்சடங்கு பணிகளை நிறுத்தினர். மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்த சடலம் யாருடையது என்ற கேள்வி எழுந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Leave a Reply