சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை சார்பில் கோவையின் பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மார்ச் 7-ஆம் தேதி காலை கோவை இரயில் நிலையத்தில் தொடங்கின. கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் கீதாஞ்சலி மற்றும் ரயில் நிலைய இயக்குனர் திரு. பழனியப்பன் ஆகியோர் கேஎம்சிஹெச் மருத்துவமனை உயரதிகாரிகள் முன்னிலையில் இதனைத் துவக்கி வைத்தனர். பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் இதில் பங்கேற்று, தங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்து கையெழுத்திட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் புரோசோன் மாலில் இந்த முகாம் தொடர்ந்தது. கேஎம்சிஹெச்-ன் செயல் இயக்குனர் டாக்டர் அருண் என் பழனிசாமி இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்து பெண்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“மருத்துவமனைக்கு உள்ளே மட்டுமல்லாது, வெளியிலும் பெண்களின் நல்வாழ்விற்காக கேஎம்சிஹெச் தொடர்ந்து அதிநவீன பரிசோதனைகள் முதல் கிராமப்புற மருத்துவ முகாம்கள் வரை, ஒவ்வொரு பெண்ணும் தனது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்,” என்று டாக்டர் அருண் பழனிசாமி குறிப்பிட்டார்.
மகளிர் தின கொண்டாட்டத்தை உற்சாகப்படுத்தும் வகையில், இரண்டு இடங்களிலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை குலுக்கல் முறையிலான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும், மருத்துவப் பரிசோதனைகளுக்கான சலுகைக் கூப்பன்களும் வழங்கப்பட்டன. பெண்கள் தங்களின் உடல்நலத்தைப் பரிசோதித்துக் கொள்வதை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
கேஎம்சிஹெச் -ன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தனது செய்தியில், “நேர்மையான மற்றும் தரமான சிகிச்சையை நியாயமான கட்டணங்களில் வழங்குவதே எங்களது நோக்கம். இதன் மூலம் பெண்கள் ஆரோக்கியமான மற்றும் விழிப்புணர்வுள்ள வாழ்க்கையை வாழ கேஎம்சிஹெச் என்றும் உறுதுணையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.



Leave a Reply