​​வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது பக்தர் உயிரிழப்பு

Spread the love
தென்கயிலாயம் என்று போற்றப்படும் கோவை பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக் கோயிலுக்கு மலையேறிக் கொண்டிருந்தபோது பக்தர் ஒருவர் திடீரென சுயநினைவிழந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட போளுவாம்பட்டி வனச்சரகத்தில், ஒன்றாவது மலைப் பாதையில் உள்ள குரங்கு பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் பக்தர் ஒருவர் மயக்க நிலையில் விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனத்துறை பணியாளர்கள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கோவை கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் என்பது தெரியவந்தது. மலையேறிக் கொண்டிருந்தபோது செங்குத்தான பாதையில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் நிலைதடுமாறி கீழே சரிந்ததாக கூறப்படுகிறது.

தகவல் கிடைத்ததும் வனத்துறை பணியாளர்கள் மற்றும் டோலி தூக்கும் சுமைப்பணியாளர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அவரது உடலை டோலியில் கட்டி, கரடுமுரடான மலைப்பாதை வழியாக பூண்டி அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து ஆலாந்துறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு பக்தர்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர். உடல்நிலை பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படும் சூழ்நிலையில், மலையேற்றத்தின் போது பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *