திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி (தனி) தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த தனபால். இவர் முன்னாள் சபாநாயகராகவும் இருந்தார். இவரது மகன் லோகேஷ் தமிழ்ச் செல்வன். கடந்த 2024 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில் , அவருடைய தந்தை தனபாலுக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போவதால், தொகுதி பக்கமே வருவதில்லையாம்.
தனபால் எங்கே என கேட்டு அந்த தொகுதி மக்கள் போஸ்டர் ஒட்டாத குறையாக அதிருப்தியில் இருக்கிறார்களாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தொடர்பான அதிமுக பாராட்டு விழாவில் மட்டும் தனபால் கலந்து கொண்டாராம். அதன் பிறகு தொகுதி பக்கம் தலை வைத்து கூட படுப்பதில்லை என்கிறார்கள் தொகுதி மக்கள்.
இந்த நிலையில் தனபால் செயல்படாமல் உள்ளதாலும், கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதாலும் வரும் தேர்தலில் அதிமுக சார்பில் களம் காணும் வேட்பாளருக்கு வெற்றி உறுதி என்கிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் முயற்சித்து வந்தார். அவருக்கு சீட் மறுக்கப்படவே, தவெக பக்கம் சாய்ந்து விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பாஜகவின் எல்.முருகன் பயன்படுத்த முயற்சிக்கிறாராம். இவர் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
தற்போது மத்திய இணையமைச்சராக இருந்து வருகிறார். இவர் , அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக சட்டசபைக்குள் நுழைந்துவிட வேண்டும் என விரும்புகிறாராம். அவிநாசி தொகுதியில் போட்டியிட விரும்பி, தமிழகம் வரும் போதெல்லாம் அவிநாசிக்கு வந்துவிடுகிறாராம். மேலும் , அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துவிட்டதால் தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக எல்.முருகன் கருதுகிறார்.



Leave a Reply