கோனியம்மன் தேர் திருவிழாவில் மத நல்லிணக்கம்: பக்தர்களுக்கு தண்ணீர் வழங்கிய இஸ்லாமியர்கள்

Spread the love

கோவையின் காவல் தெய்வமாக வணங்கப்படும் கோனியம்மன் திருக்கோவில் தேர் திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவை முன்னிட்டு, பழமையான அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் பக்தர்களுக்கு சுமார் 15,000 தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, திருக்கோவிலுக்கு அக்னி குண்டம் ஏந்தி வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், வெயிலின் தாக்கத்தில் சோர்வடைந்திருந்த பக்தர்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக “அனைவரும் அண்ணன்–தம்பியாக இம்மண்ணில் வாழ வேண்டும்” என்ற நல்லெண்ணத்தோடு இந்த சேவை செய்யப்பட்டதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தேர் திருவிழா நாளில் குடிநீர் வழங்கும் பணியை தொடர்ந்து செய்து வருகிறோம் என்றும், மதத்தைத் தாண்டிய நட்புணர்வுடன் வாழ்வதே எங்கள் நோக்கம் என்றும் அவர்கள் கூறினர்.

இந்த மனிதநேய செயல் திருவிழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.