இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். நூற்றாண்டை எட்டிய பொதுவுடைமை போராளியாக விளங்கிய அவர், தனது வாழ்நாளை முழுவதும் சமூகநீதி மற்றும் விவசாயிகள் உரிமைக்கான போராட்டங்களுக்கு அர்ப்பணித்திருந்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த நல்லகண்ணு, இந்திய சுதந்திரப் போராட்டம், விவசாயிகள் உரிமை இயக்கம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம் மற்றும் கனிமவளக் கொள்ளைக்கு எதிரான இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டவர். பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை வாழ்க்கையும் அனுபவித்துள்ளார்.
இந்நிலையில், மறைவுக்குப் பிறகு தனது உடலை மருத்துவம் பயிலும் மாணவர்களின் பயிற்சிக்காக அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு தானமாக வழங்குவதாக அவர் முன்கூட்டியே உறுதியளித்திருந்தார். அதன்படி, அவரது மகள் மற்றும் பேரனிடமிருந்து வாரிசு ஒப்புதல் பெறப்பட்டு, உடலை பதப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவரது மறைவையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக நல்லகண்ணுவின் உடலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாலை 5.30 மணி முதல் மறுநாள் மாலை 3.30 மணி வரை கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.



Leave a Reply