சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்திற்கு வந்த பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து எம்ஜிஆர் உருவச்சிலைக்கும் மாலை அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அதிமுகவின் 3ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் விலைவாசி அதிகரித்து, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சொத்துவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டதால் குடும்பச் செலவுகள் பன்மடங்கு உயர்ந்துவிட்டன,” என்றார்.
மக்களின் சுமையை குறைக்கும் நோக்கில், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒருமுறை மட்டுமே ரூ.10,000 கருணைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,000, பிளஸ் 2 வரை கல்வி முடித்து பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8,000 இலிருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்படும் என்றும், தைப் பொங்கலன்று வழங்கப்படும் பொங்கல் தொகுப்புடன் கூடுதலாக ரூ.1,000 வழங்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 300 யூனிட்டிலிருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 1,000 யூனிட்டிலிருந்து 1,400 யூனிட்டாகவும் உயர்த்தப்படும் என அறிவித்தார்.
“நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வருவாய் மூலங்களை அதிகரித்து, அறிவித்துள்ள நலத்திட்டங்களை செயல்படுத்துவோம். மக்களின் தற்போதைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விலைவாசி உயர்வில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன,” என்று இபிஎஸ் தெரிவித்தார்.



Leave a Reply