கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி, ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது மூவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரிவாளைக் காட்டி மிரட்டிய குற்றவாளிகள், மாணவியையும் அவரது நண்பரையும் தாக்கி வன்கொடுமையில் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, சதீஷ், அவரது சகோதரர் காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவி, அவரது நண்பர், உறவினர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் உள்ளிட்ட 113 பேரிடம் சாட்சி பதிவு செய்யப்பட்டு நிறைவடைந்துள்ளது.
இதையடுத்து, வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் இன்று தொடங்கின. இதற்காக காவலில் உள்ள சதீஷ், காளீஸ்வரன், தவசி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இன்று அரசு தரப்பின் வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன. நாளை குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வாதங்கள் நடைபெறும். தொடர்ந்து இறுதி விசாரணை நிறைவடைந்த பின் தீர்ப்புத் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Leave a Reply