கோவை சிங்காநல்லூரில் நகை–வெள்ளி கொள்ளை: முன்னாள் ஊழியருக்கு தொடர்பு? போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை

Spread the love

கோவை சிங்காநல்லூரில் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கடையின் முன்னாள் ஊழியருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

சிங்காநல்லூர் திருச்சி சாலையைச் சேர்ந்த ராஜேஷ் (24), மத்திய மண்டல அலுவலகம் அருகே நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் கடையை பூட்டி வைத்து மகா சிவராத்திரி விழாவுக்கு சென்றார்.

அதிகாலை வீடு திரும்பிய அவர், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் வைக்கப்பட்டிருந்த 48 பவுன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜேஷ் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் இரவு 10.45 மணியளவில் ஒரு வாலிபர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி தப்பிச் செல்வது பதிவாகியிருந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அந்த வாலிபர் ஒரு வாரத்திற்கு முன்பு அதே கடையில் வேலை கேட்டு வந்திருப்பது தெரியவந்தது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவர், வேலை தொடர்பாக பின்னர் தகவல் தெரிவிப்பதாக கூறி அனுப்பப்பட்டதாக ராஜேஷ் தெரிவித்தார்.

மேலும், கடையில் முன்பு வேலை பார்த்த ஒரு ஊழியருக்கும் இந்த கொள்ளையில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *